
2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024-ல் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா வெல்வதற்கு ஜஸ்பிரித் பும்ரா முக்கியப் பங்களிப்பை ஆற்றினார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இவர் எதிரணியைத் திணறடித்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியப் பயணத்தில் பும்ரா வந்தாலே விக்கெட் தான் என்ற நிலையில் அவருடையச் செயல்பாடு இருந்தது.
இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
2024-ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பும்ரா தான் முதலிடத்தில் உள்ளார். 14.92 சராசரியில் 30.1 ஸ்டிரைக் ரேட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் (52 விக்கெட்டுகள்) உள்ளார்.
இத்தகையச் சாதனையைப் புரிந்துள்ள அவர், 2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார்.