சாம்பியன்ஸ் கோப்பை: பும்ரா விலகல்; ராணா, வருண் சேர்ப்பு

யஷஸ்வி ஜெயிஸ்வால், முஹமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பை: பும்ரா விலகல்; ராணா, வருண் சேர்ப்பு
ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக எவ்விதப் போட்டியிலும் விளையாடாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் இதே அணி தான் அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து தொடரில் முதலிரு ஆட்டங்களில் பும்ரா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இங்கிலாந்து தொடரில் புதிதாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்போது, மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் பும்ரா விளையாடுவார் என்று கூறியிருந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

பிஜிடி தொடரில் கடைசி டெஸ்டின்போது காயம் காரணமாக பும்ரா வெளியேறினார். இந்தக் காயத்தின் தன்மை குறித்து பெரிதளவில் தகவல்கள் வெளிவராத நிலையில், ஸ்கேன் செய்து பார்த்த பிறகு சாம்பியன்ஸ் கோப்பையில் பும்ரா விளையாடுவது இறுதி செய்யப்படும் என்று பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் மாற்றங்கள் மேற்கொண்டு இறுதி அணியைச் சமர்ப்பிக்க ஐசிசி விதித்திருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே, பும்ரா குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, நேற்றிரவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியிலிருந்து பும்ரா விலகியுள்ளார். இவருக்குப் பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகி, ராணா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

பும்ரா தவிர்த்து மேலும் ஒரு மாற்றத்தை பிசிசிஐ செய்துள்ளது. மாற்று தொடக்க பேட்டராக அணியில் சேர்க்கப்பட்டிருந்த யஷஸ்வி ஜெயிஸ்வால் நீக்கப்பட்டு, கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஏற்கெனவே குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ள நிலையில் 5-வது சுழற்பந்துவீச்சாளராக வருண் இடம்பெற்றுள்ளார்.

யஷஸ்வி ஜெயிஸ்வால், முஹமது சிராஜ், ஷிவம் துபே ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். எனினும், இவர்கள் இந்திய அணியுடன் துபாய் பயணிக்கப்போவதில்லை.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முஹமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.

மாற்று வீரர்கள்

யஷஸ்வி ஜெயிஸ்வால், முஹமது சிராஜ், ஷிவம் துபே.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in