
2023-24 ஆண்டிற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒப்பந்தத்தை பூரன், ஹோல்டர் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். அலிக் அதனேஸ், கேசி கார்ட்டி, டேஜ்நரைன் சந்தர்பால், குடாகேஷ் மோடீ ஆகியோர் முதல் முறையாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் இவ்வாறு செய்வது புதிது அல்ல. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் நட்சத்திர வீரர்களான கைரன் பொலார்ட், டுவைன் பிராவோ மற்றும் கிறிஸ் கெயில் இதே போல் அணியுடனான ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர். சமீபத்தில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்டும் அணியுடனான ஒப்பந்தத்தை நிராகரித்தார்.
தாங்கள் போகும் பாதையில் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2027-ம் ஆண்டு நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தத்தை அளித்ததாகவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வாளர் தேஷ்மாண்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 37 டெஸ்ட் மற்றும் 86 ஒரு நாள் ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் ஹோல்டர். இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடாத பூரன், 61 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கேற்று அதில் 17 முறை கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேயர் 28 ஒரு நாள் மற்றும் 18 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கவிருக்கும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்த 3 வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.