சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?

2025-26 ஆஷஸுக்கான அணியைக் கட்டமைப்பது குறித்து ஆண்டர்சனிடம், பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
ANI

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வரும் ஆகஸ்டில் ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிகிறது.

இங்கிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2002-ல் அறிமுகமானார் ஜேம்ஸ் ஆண்டர்சன். தற்போது டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார். அண்மையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 700 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதன்பிறகு, இங்கிலாந்து அணி எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் - செப்டம்பரில் இலங்கைக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இலங்கையுடனான முதல் டெஸ்ட் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆண்டர்சன் 42 வயதை அடைந்துவிடுவார். இருந்தபோதிலும், தான் நல்ல உடற்தகுதியுடனே இருந்து வருவதாக ஆண்டர்சன் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் நியூசிலாந்திலிருந்து இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு ஜேம்ஸ் ஆண்டர்சனை நேரில் சந்தித்த அவர், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 2025-26 ஆஷஸுக்கான அணியைக் கட்டமைப்பது குறித்து ஆண்டர்சனிடம் பேசியிருப்பதாக தி கார்டியன் நேற்று செய்தி வெளியிட்டது.

எனவே, ஆண்டர்சன் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்காக டெஸ்டில் 700 விக்கெட்டுகள், ஒருநாளில் 269 விக்கெட்டுகள், சர்வதேச டி20யில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in