லார்ட்ஸ் டெஸ்டுடன் ஓய்வு: ஜேம்ஸ் ஆண்டர்சன்

2025-26 ஆஷஸுக்கான இளம் அணியைக் கட்டமைப்பது குறித்து ஆண்டர்சனிடம் பிரெண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டுடன் ஓய்வு: ஜேம்ஸ் ஆண்டர்சன்
ANI

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 10-ல் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் நியூசிலாந்திலிருந்து இங்கிலாந்து வந்துள்ளார். அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை நேரில் சந்தித்த அவர், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 2025-26 ஆஷஸுக்கான இளம் அணியைக் கட்டமைப்பது குறித்து ஆண்டர்சனிடம் பேசியதாக தி கார்டியன் நேற்று செய்தி வெளியிட்டது.

இதனால், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுடன் ஆண்டர்சன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அவருடைய சொந்த மைதானமான ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறுவதால், இந்த ஆட்டத்துடன் அவர் ஓய்வு பெறலாம் என்று கணிக்கப்பட்டன.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்காக 187 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளா். 194 ஒருநாள் ஆட்டங்களில் 269 விக்கெட்டுகளையும், 19 சர்வதேச டி20யில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 700 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in