
இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.
மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. உணவு இடைவேளை வரை கேஎல் ராகுல் மற்றும் ஜெயிஸ்வால் விக்கெட்டை இழக்காமல் 78 ரன்கள் சேர்த்தார்கள்.
அரை சதத்தை நெருங்கிய கேஎல் ராகுல் 46 ரன்களுக்கு கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 12-வது டெஸ்ட் அரை சதத்தை அடித்தார்.
ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குத் திரும்பிய லியம் டாசன், ஜெயிஸ்வாலை 58 ரன்களுக்கு வீழ்த்தினார். அடுத்து வந்த கேப்டன் ஷுப்மன் கில்லும் 12 ரன்களுக்கு ஸ்டோக்ஸிடம் வீழ்ந்தார். தேநீர் இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, சாய் சுதர்சன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்.
மூன்றாவது பகுதி ஆட்டத்தில் சாய் சுதர்சன் - ரிஷப் பந்த் கூட்டணி 50 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியும் 65-வது ஓவரில் 200 ரன்களை தாண்டியது.
இந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக 37 ரன்களுடன் நன்றாக பேட் செய்து வந்த ரிஷப் பந்த், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுக்கு முயன்றபோது அவருடைய காலில் காயம் ஏற்பட்டது. ஷுவில் பட்ட பந்து, அவர் காலைப் பதம் பார்த்து ரத்தம் வரச் செய்து வீக்கத்தையும் உண்டாக்கியது. இதனால் வலியால் துடித்த ரிஷப் பந்த் வேறு வழியில்லாமல் ரிடையர்ட் ஹர்ட் ஆனார். நடக்கவே முடியாமல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
டெஸ்டில் முதல் அரை சதத்தை அடித்து நம்பிக்கையளித்த சாய் சுதர்சன், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷார்துல் தாக்குர் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்குர் ஆகிய இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
முன்னதாக, இந்திய கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக டாஸில் தோற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாகத் தோற்கும் 14-வது டாஸ் இது.
மான்செஸ்டரில் டாஸ் வென்ற அணி 11 முறை பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதில் ஒருமுறை கூட டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றதில்லை. இருந்தபோதிலும், ஸ்டோக்ஸ் பந்துவீச்சு முடிவை எடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Ind v Eng | India v England | Ind vs Eng | India vs England | Yashasvi Jaiswal | Sai Sudharsan | KL Rahul | Rishabh Pant | Ben Stokes | Anshul Kamboj | Liam Dawson | Old Trafford | Old Trafford Test | Manchester | Manchester Test | Pant Injury | India Tour of England | India England Series