4-வது டி20: 10 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி!

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
4-வது டி20: 10 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி!
படம்:
1 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான நான்காவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வே, இந்தியா இடையிலான நான்காவது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானார்.

முதல் 4 ஓவர்களில், ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி என்கிற வீதத்தில் ஜிம்பாப்வே விளையாட அந்த அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்தது. பவர்பிளேயின் கடைசி இரு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியதால், இந்த இரு ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே ஜிம்பாப்வே எடுத்தது.

6 ஓவர்களில் இந்த அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தது. பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாலும் விக்கெட்டை வீழ்த்த முடியாததால், அபிஷேக் சர்மாவை அழைத்தார் கில். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த நிலையில், மருமனியை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார் அபிஷேக் சர்மா. அடுத்த ஓவரிலேயே ஷிவம் துபே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மத்வேரேவை வீழ்த்தினார். ரன் வேகம் குறைய 10 ஓவர்களில் ஜிம்பாப்வே 67 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு சிகந்தர் ராஸா மட்டும் நம்பிக்கையுடன் அதிரடியாக விளையாடினார். மற்ற பேட்டர்கள் எவரும் இவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ராஸா அதிரடியால் அணியின் ஸ்கோர் 140-ஐ தாண்டியது. ராஸா 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

இலக்கை விரட்டி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெயிஸ்வால் முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளை விரட்டினார். அடுத்த ஓவரில் கில் இரு பவுண்டரிகள் அடித்தார். மூன்றாவது ஓவரில் ஜெயிஸ்வால் 4 பவுண்டரிகளை விளாசினார். முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி 43 ரன்களுக்கு விரைந்தது. அடுத்த மூன்று ஓவர்களில் ஜிம்பாப்வே ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. 6 ஓவர்களில் இந்திய அணி 61 ரன்கள் எடுத்தது.

ராஸா ஓவரில் பவுண்டரி அடித்த ஜெயிஸ்வால் 29 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணற இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 106 ரன்கள் எடுத்தது.

ஷுப்மன் கில்லும் 35-வது பந்தில் அரை சதத்தை எட்டினார். கடைசி வரை விக்கெட்டை இழக்காத இந்திய அணி 15.2 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெயிஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களும், கில் 39 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in