இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்?

ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து 35 டெஸ்டுகளில் 22 டெஸ்டுகளை வென்றுள்ளது.
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்?
ANI
2 min read

சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து வெள்ளைப் பந்து கேப்டன் பொறுப்பிலிருந்து ஜாஸ் பட்லர் விலகினார். இதனால், புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்லர் தலைமையிலான அணியில் துணை கேப்டனாக இருந்த ஹாரி புரூக் டி20 கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 2022-ல் அறிவித்தார். எனினும், ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். சாம்பியன்ஸ் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிக்க ஸ்டோக்ஸ் விரும்பியிருந்தார். எனினும், 6 மாதங்களில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் விளையாடவில்லை.

பென் ஸ்டோக்ஸ் வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கப்படுவது பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ராப் கீ செய்தியாளர்களிடம் கூறுகையில், "மறைமுகமான விஷயம் என்றெல்லாம் எதுவும் இல்லை. இருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, எது சரியான முடிவாக இருக்கும்? மற்ற விஷயங்களில் அது எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும்? என்பதைப் பார்க்க வேண்டும்.

நான் பார்த்த மிகச் சிறந்த கேப்டன்களில் பென் ஸ்டோக்ஸ் ஒருவர். எனவே, கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ் இல்லையென்றால் அது முட்டாள்தனமானது. அவர் நம்பமுடியாத அளவுக்குத் தந்திரமாகச் செயல்படக்கூடியவர். டெஸ்டில் இதைப் பார்த்துள்ளேன். அவர் தலைமைப் பண்பு மிக்கவர். ஒரு வீரரிடமிருந்து சிறப்பான வெளிப்பாட்டைப் பெறக் கூடிய திறன் கொண்டவர். அழுத்தமான சூழல் இருந்தால், இப்படிதான் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று மற்ற வீரர்களுக்கு பாதை வகுத்துக் கொடுப்பார். தலைமைப் பண்பில் இதுமாதிரியான தகுதிகள் தான் தேவை.

அவர் அட்டகாசமான வீரர், அட்டகாசமான தலைமைப் பண்புடையவர் என்பது தெரியும். அவருடையப் பணிச்சுமை உள்ளிட்டவை சார்ந்தை தான் கவனத்தில் எடுக்க வேண்டும். மற்ற விஷயங்களை ஆபத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. முடிவு தவறாகப் போகும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? முடிவு சரியாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்த முடிவுகளை தான் நான் எடுக்க வேண்டும்" என்றார் ராப் கீ.

மேலும் கூறுகையில், "டெஸ்ட் மற்றும் ஒருநாள் டி20யை காட்டிலும் சற்று நெருக்கமானவை. இந்தியாவைப் பார்க்கிறோம். அவர்கள் டி20 கிரிக்கெட்டை விளையாடும் விதம் மற்றும் டி20யில் விளையாட இளம் வீரர்கள் உள்ளார்கள். ஆனால், டெஸ்டில் விளையாடும் வீரர்கள் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் வித்தியாசத்தை உண்டாக்குகிறார்கள்.

ஹாரி புரூக்கும் அற்புதமான கேப்டனாக இருக்கலாம். பென் ஸ்டோக்ஸின் பணிச் சுமை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸால் ஹாரி புரூக்கை கேப்டனாக அற்புதமாகச் செயல்பட வைக்க முடியும்" என்றார் ராப் கீ.

2022-க்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். இவர்களை ஒன்றிணைத்தது ராப் கீ. ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து 35 டெஸ்டுகளில் 22 டெஸ்டுகளை வென்றுள்ளது.

பிரெண்டன் மெக்கல்லம் அண்மையில் டெஸ்டுடன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். வெள்ளைப் பந்து அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்ற பிறகு, இங்கிலாந்து 11 ஆட்டங்களில் 10-ல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

எனவே, பென் ஸ்டோக்ஸை வெள்ளைப் பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவதை பிரெண்டன் மெக்கல்லம் வரவேற்கதான் செய்வார்.

டெஸ்ட் கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே இங்கிலாந்து கேப்டனாக செயல்பட்டுள்ளார். 2021-ல் பென் ஸ்டோக்ஸ் வழிநடத்திய 3 ஒருநாள் ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து டி20 அணியின் கேப்டனாக ஒரு ஆட்டத்தில் கூட ஸ்டோக்ஸ் இருந்ததில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in