

டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 அன்று தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய அணிக்கு 7 டி20 ஆட்டங்கள் மட்டுமே மீதமுள்ளன. ஆனால், பேட்டிங்கில் இந்திய அணி இன்னும் தடுமாறி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார்கள். யார் எந்த இடத்தில் விளையாடப் போகிறார்கள் என்ற உறுதிப்பாடு இந்திய அணியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்திய டி20 அணிக்கு வெற்றிகரமான தொடக்க பேட்டர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருந்தார்கள். ஷுப்மன் கில் வருகை மற்றும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது, சஞ்சு சாம்சன் இடத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. ஓரிரு ஆட்டங்களில் நடுவரிசையில் களமிறக்கப்பட்டார் சஞ்சு சாம்சன். பிறகு, விக்கெட் கீப்பருக்கான இடத்தை ஜிதேஷ் சர்மாவிடம் இழந்தார் சஞ்சு சாம்சன்.
அதிரடியான ஃபார்மில் இருந்த சஞ்சு சாம்சன் இடத்தில் ஷுப்மன் கில் களமிறக்கப்படுவது பெரும் விமர்சனத்தை எழுப்பியது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஷுப்மன் கில்லும் திணறி வருகிறார்.
ஆசியக் கோப்பை டி20யில் 7 ஆட்டங்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலியாவில் 5 ஆட்டங்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தார். தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் ஒரு அரை சதம்கூட அடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
"சற்று கவலையளிக்கிறது. ஷுப்மன் கில் தொடக்க பேட்டர் மட்டும் கிடையாது. அவர் துணை கேப்டனும் கூட. துணை கேப்டனை அணியிலிருந்து எப்படி நீக்க முடியும்? இது மிகக் கடினமான முடிவாக இருக்கப்போகிறது. இந்த முடிவை எடுக்க வேண்டுமெனில், தென்னாப்பிரிக்க தொடரில் சஞ்சு சாம்சனைக் கொண்டு வர முடியாது. காரணம், துணை கேப்டனை அணியிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது. கடந்த காலங்களில் துணை கேப்டன்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்கலாம். ஆனால், அவருக்கு நிறைய வாய்ப்புகளைத் தர வேண்டும். 5 ஆட்டங்களில் அவர் சரியாகச் செயல்படாவிட்டால், பிறகு முடிவெடுக்கலாம்.
உலகக் கோப்பையில் விளையாடப் போகும் உங்களுடைய சிறந்த விளையாடும் லெவன் மற்றும் சிறந்த அணி குறித்து உங்களுக்கு தற்போது தெரிந்திருக்க வேண்டும். பந்துவீச்சைப் பொறுத்தவரை, அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும், ஹர்ஷித் ராணா தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்டி வருகிறார். தான் எதில் சிறந்தவர் என்பதை அவர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.
ஷுப்மன் கில் ரன் குவிக்காவிட்டால் அவர் அணியில் இருக்க வேண்டுமா இல்லையா அல்லது சஞ்சு சாம்சன் விளையாட வேண்டுமா என்பது மட்டும் தான் கேள்வி. ஷுப்மன் கில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவிப்பதை மட்டும் நாம் பார்க்கக் கூடாது. இது நடக்கக் கூடாது" என்றார் அஸ்வின்.
Ashwin | Shubman Gill | Team India | India T20 | Sanju Samson | IND v SA |