இரானி கோப்பை: 27 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வெற்றி!

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரானி கோப்பை: 27 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வெற்றி!
1 min read

ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா - மும்பை அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பைப் போட்டி அக்டோபர் 1 அன்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சர்ஃபராஸ் கான் 222 ரன்களும், கேப்டன் ரஹானே 97 ரன்களும் எடுத்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்கள் எடுத்து அசத்தினார். துருவ் ஜுரெல் 93 ரன்கள் எடுத்தார். ஷம்ஸ் முலானி, கோட்டியன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கோட்டியன் ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் சாரான்ஸ் ஜெயின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி விளையாடுவதற்கு முன்பே கடைசி நாள் ஆட்டம் நிறைவடைந்ததால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்று மும்பை அணி அசத்தியுள்ளது.

இரட்டைச் சதம் அடித்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவிய சர்ஃபராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in