
ஐபிஎல் 2025 பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விரைவில் தொடங்கி மே 30-ல் இறுதிச் சுற்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்ததையடுத்து, ஐபிஎல் 2025 ஒரு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவில் முடிவெடுத்து கடந்த 9 அன்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே மே 8 அன்று தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் இடையிலான ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக சனிக்கிழமை அறிவித்தன. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டியை மீண்டும் விரைவாகத் தொடங்குவது குறித்து பிசிசஐ ஆலோசனை மேற்கொள்ளத் தொடங்கியது.
பிளே ஆஃப் மற்றும் இறுதிச் சுற்றுக்கு 6 நாள்கள் தேவைப்படும் என்பதால், மீதமுள்ள 12 ஆட்டங்களை விரைவில் நடத்தி முடிப்பது குறித்து பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகி வரும் தகவலின் அடிப்படையில் மே 25 அன்று நடைபெறவிருந்த இறுதிச் சுற்றை மே 30-ல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், ஐபிஎல் ஆட்டங்களை வழக்கம்போல் எல்லா இடங்களிலும் நடத்துவது தற்போதையச் சூழலில் சவாலானது என்பதால், மே 16 முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாதில் ஆட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் அணி நிர்வாகங்கள் அனைத்தும் தங்களுடைய விருப்பபமான இடத்தைத் தேர்வு செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிறு மாலைக்குள் ஐபிஎல் நிர்வாகங்களுக்குப் புதிய அட்டவணை தயாரித்து கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டி நிறுத்தப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எனவே, வீரர்களைத் திரும்ப அழைத்து வருவது குறித்து திட்டமிடுமாறு அணி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.