
ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து சில விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ தலைமையகத்தில் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள் என 10 அணிகளைச் சார்ந்தவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது பிசிசிஐ. அதன்படி கீழ்கண்ட விதிமுறைகள் ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025: புதிய விதிமுறைகள்
ஐபிஎல் போட்டிகளில் ஓவர்களை வீச தாமதம் ஏற்பட்டால் அணியின் கேப்டன்களுக்கு விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும். அதற்குப் பதிலாக அபராதப் புள்ளிகள் விதிக்கப்படும். இந்தப் புள்ளிகள் 36 மாதங்கள் வரை நீடிக்கும்.
இரவு ஆட்டங்களின் 2-வது இன்னிங்ஸில் பனிபொழிவைச் சமாளிக்க 11-வது ஓவர் முதல் வேறொரு பழைய பந்தை வழங்கும்படி நடுவரிடம் ஃபீல்டிங் கேப்டன் கோரமுடியும். பகல் நேர ஆட்டங்களில் இதற்கு அனுமதி கிடையாது.
கொரோனா அச்சம் காரணமாக 2020 முதல் பந்தைப் பளபளப்பாக்குவதற்காக உமிழ்நீரைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
உயரம் தொடர்பான நோ பால், அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வைட் போன்றவற்றுக்கு டிஆர்எஸ் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஹாக் ஐ (Hawk-Eye), பால் டிராக்கிங் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.