
ஐபிஎல் அணிகள் தக்கவைக்கவுள்ள வீரர்களின் விவரம் நாளை (அக்.31) வெளியாக உள்ளது.
ஐபிஎல் 2025-2027 பருவத்துக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ கடந்த செப். 29 அன்று வெளியிட்டது. இதில், தக்கவைத்தல், ஆர்டிஎம் முறைகளில் ஓர் அணி அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களையும் (உள்நாடு & வெளிநாடு), அதிகபட்சமாக இரு சர்வதேச அனுபவம் இல்லா வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சர்வதேச ஆட்டங்களுக்கு 5 வருடங்கள் தேர்வாகாத இந்திய வீரர், அன்கேப்டு வீரராகக் குறிப்பிடப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால் ஐபிஎல் 2025-ல் அன்கேப்டு வீரராக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்?
* முதல் வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 18 கோடி
* 2-வது வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 14 கோடி
* 3-வது வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 11 கோடி
* 4-வது வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 18 கோடி
* 5-வது வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 14 கோடி
* அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்பவருக்கு ரூ. 4 கோடி
எனவே ஒரு அணி 5 வீரர்களைத் தக்கவைக்கும் பட்சத்தில் அந்த அணி ரூ. 75 கோடியை செலவு செய்யும். மீதமிருக்கும் 45 கோடி ரூபாயுடன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்.
சன்ரைசர்ஸ் அணி கிளாசனை முதல் வீரராக ரூ. 23 கோடிக்கு தக்கவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி செய்யும் பட்சத்தில் அந்த அணி 5-வதாக தக்கவைக்கும் வீரரை குறிப்பிட்ட தொகையை (ரூ. 14 கோடி) விட குறைந்த தொகையில் தக்கவைத்து கொள்ளலாம்.
ஆர்டிஎம் முறை எவ்வாறு வேலை செய்யும்?
தங்களது அணியில் உள்ள வீரரை ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி ஒரு அணியால் வாங்க முடியும். ஒரு அணி எவ்வளவு வீரர்களைத் தக்கவைத்து கொள்கிறது என்பதை பொறுத்து ஆர்டிஎம் முறை செயல்படும்.
6 வீரர்களையும் தக்கவைத்துக் கொண்டால் அந்த அணி ஆர்டிஎம் முறையில் எந்த வீரரையும் தேர்வு செய்ய முடியாது.
5 வீரர்களையும் தக்கவைத்துக் கொண்டால் அந்த அணி ஆர்டிஎம் முறையில் ஒரு வீரரை தேர்வு செய்யலாம்.
4 வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில் ஒரு அணி ஆர்டிஎம் முறையில் இரு வீரர்களை தேர்வு செய்யலாம்.
ஒரு அணி எந்த வீரரையும் தேர்வு செய்யாத பட்சத்தில் அந்த அணி ஆர்டிஎம் முறையில் 6 வீரர்களை தேர்வு செய்யலாம்.
இந்த முறை ஆர்டிஎம் முறையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஒரு வீரரை ஆர்டிஎம் முறையில் ஒரு அணி தேர்வு செய்யும் பட்சத்தில், கடைசியாக அந்த வீரருக்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகமான தொகையை கொடுத்து அதே அணியால் அந்த வீரரை தேர்வு செய்யமுடியும்.
உதாரணத்துக்கு, கே.எல். ராகுல் லக்னௌ அணியால் தக்கவைக்கப்படாத பட்சத்தில் அவர் ஏலத்தில் பங்கேற்பார். அப்போது சிஎஸ்கே அணி அவரை 16 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்கிறது, அப்போது லக்னௌ அணி ஆர்டிஎம் முறைப்படி ராகுலை ரூ. 16 கோடிக்கு தேர்வு செய்யலாம். ஆனால், ஒருவேளை சிஎஸ்கே அணி விருப்பப்பட்டால் ரூ. 16 கோடியை விட அதிகமான தொகையை கொடுத்து மீண்டும் ராகுலை தேர்வு செய்யலாம்.