ஐபிஎல் பிளேஆஃப்: 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி!

62 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் கேகேஆர் அணி மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் பிளேஆஃப்: 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி!
ஐபிஎல் பிளேஆஃப்: 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி!

ஐபிஎல் பிளே ஆஃப் தொடங்க இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 3 இடங்களைப் பிடிக்க 7 அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 22 அன்று தொடங்கியது. இதுவரை 62 ஆட்டங்கள் முடிவடைந்தது. இதில் கேகேஆர் அணி மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் 8 ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் 3 இடங்களைப் பிடிக்க 7 அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அணிகள் என்ன செய்ய வேண்டும்?:

ராஜஸ்தான்: 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை இரண்டிலும் தோல்வி அடைந்தாலும், அது மோசமான தோல்வியாக இல்லாத பட்சத்தில் 3 அல்லது 4-வது இடத்தை பிடிக்கும்.

சன்ரைசர்ஸ்: சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இனி 2 ஆட்டங்கள் மீதமுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி 1-ல் தோற்றால் 2-வது இடத்தைப் பிடிக்கும் சன்ரைசர்ஸ் அணி. இரண்டிலும் தோல்வி அடைந்தால் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

லக்னௌ: லக்னௌ அணிக்கு ரன் ரேட் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இனி வரும் இரண்டு ஆட்டங்களிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் லக்னௌ அணி எந்த பிரச்னையும் இல்லாமல் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இரண்டிலும் தோல்வி அடைந்தால் பிளேஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். ஒருவேளை ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.

சிஎஸ்கே: சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலம் அவர்களது ரன் ரேட். 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே போதுமானது. ஆர்சிபி அணிக்கு எதிராக பெரிய தோல்வியை அடைந்தால் பிளேஆஃப் வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் இருக்கும். ஆனால், ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி தகுதி பெறும்.

ஆர்சிபி: தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ள ஆர்சிபி அணி சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் (இலக்கு 200-க்கு அதிகமாக இருந்தால்). அதேபோல சன்ரைசர்ஸ் அணி மற்றும் லக்னௌ அணிகள் 2-ல் ஒன்றில் தோல்வி அடைய வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் 4 அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி தகுதி பெறும்.

தில்லி & குஜராத்: தில்லி அணிக்கு ஒரு ஆட்டம் மட்டுமே உள்ளது. அதில், மிகப்பெரிய வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுகளும் தில்லிக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் தில்லி தகுதி பெறும். குஜராத் அணிக்கும் இதே நிலைமை தான். இனி வரும் 2 ஆட்டங்களிலும் பெரிய வெற்றியை பெற்று மற்ற அணிகளின் முடிவுகளும் குஜராத் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in