
ஐபிஎல் ஏலத்தில் லக்னெள அணிக்காக ரூ. 27 கோடிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த்.
இதற்கு முன்பு ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு தேர்வானவர் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க். கடந்த வருடம் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு கேகேஆர் அணி தேர்வு செய்தது.
இந்நிலையில் ஜெட்டாவில் நடைபெற்று வரும் மெகா ஏலத்தில், கடந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனான ஷ்ரேயஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. இதனால் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்குத் தேர்வான வீரர் ஆனார் ஷ்ரேயஸ் ஐயர். ஆனால் சில நிமிடங்களில் ஐயரின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்.
லக்னெள அணி, ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்குத் தேர்வு செய்து அவரைப் புதிய சாதனையாளராக்கியது. ஆர்டிஎம் மூலம் தில்லி அணி ரிஷப் பந்தைத் தேர்வு செய்ய எண்ணியது. ஆனால் ரூ. 20.75 கோடியிலிருந்து ஒரேடியாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பந்தைத் தேர்வு செய்து வெற்றி கண்டது லக்னெள. இதையடுத்து அந்த அணியின் புதிய கேப்டனாகவும் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.