
சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான தீபக் சஹாரை மும்பையிடம் இழந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2018 முதல் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார் தீபக் சஹார். முதல் மூன்று வருடங்களில் சிறப்பாகப் பந்துவீசி, சிஎஸ்கேவின் பவர்பிளே ஸ்பெஷலிஸ்டாக விளங்கினார். தீபக் சஹார் அணியில் இருந்தபோது சிஎஸ்கே அணி மூன்றுமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்றது. தோனிக்கு மிகவும் பிடித்தமான சிஎஸ்கே வீரர்களில் ஒருவராகவும் தீபக் சஹார் இருந்தார். எனினும் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் மட்டுமல்லாமல் இந்திய அணியிலும் பல ஆட்டங்களை அவர் தவறவிட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரைத் தேர்வு செய்ய சிஎஸ்கே அணி கடுமையாக முயன்றது. 8 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே போட்டியிட்டபோதும் இறுதியில் ரூ. 9.25 கோடிக்கு தீபக் சஹாரை சிஎஸ்கேவிடமிருந்து பறித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.