அதிரடி பேட்டிங், அதிவேகப் பந்துவீச்சால் பஞ்சாபை வீழ்த்திய லக்னௌ!

அறிமுக வீரரான மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி காக்
டி காக்ANI
2 min read

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னௌ அணி.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லக்னௌ, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னௌவில் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் பூரன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கே.எல். ராகுல் இம்பாக்ட் வீரராக விளையாடினார். எனவே நிகோலஸ் பூரன் லக்னௌ அணியின் கேப்டனாகச் செயல்பட்டார்.

லக்னௌ அணியில் டி காக் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினார். இம்பாக்ட் வீரராக விளையாடிய ராகுல் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து படிக்கல் 9 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பிறகு பூரன் - டி காக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டி காக் அரை சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். டி காக் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பூரன் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு பதோனி 8 ரன்களிலும், ரவி பிஷ்னாய் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இவர்களது விக்கெட்டை சாம் கரன் வீழ்த்தினார்.

முடிவில் கிருனாள் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. கிருனாள் பாண்டியா 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

இதன் மூலம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது லக்னௌ அணி. சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியில் தவன் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடிக்க 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி.

இதைத் தொடர்ந்து இந்த ஜோடியை அறிமுக வீரரான மயங்க் யாதவ் பிரித்தார். அவருடைய அதிவேகப் பந்துவீச்சு ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் வீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். பேர்ஸ்டோ 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு பிரப்சிம்ரன் 19 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 6 ரன்களிலும் வெளியேறினர். இவர்களது விக்கெட்டையும் மயங்க் யாதவ் எடுத்தார்.

இதன் பிறகு கேப்டன் தவன் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த சாம் கரன் முதல் பந்திலேயெ வெளியேறினார். 18 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.

முடிவில் ஆட்டமிழக்காமல் லிவிங்ஸ்டன் 28 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 178 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in