கடைசிப் பந்தில் ரஷித் கான் பவுண்டரி: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியை அளித்த குஜராத்

கடைசிப் பந்தில் குஜராத் வெற்றிக்கு இரு ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்கில் இருந்த ரஷித் கான் பாயிண்டில் பவுண்டரி அடித்து குஜராத்தை வெற்றி பெறச் செய்தார்.
குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார்
குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார்ANI

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷித் கான் கடைசிப் பந்தில் பவுண்டரி அடிக்க குஜராத் டைடன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் மோதின. மழை காரணமாக 25 நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 10 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.

தொடக்க பேட்டர்கள் ஜெயிஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இந்த முறையும் அதிரடியான தொடக்கத்தைத் தரவில்லை. முதல் 4 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தார்கள். 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார் ஜெயிஸ்வால். பவர்பிளேயின் கடைசி ஓவரில் பந்துவீச வந்த ரஷித் கான் பட்லரை 8 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்தது.

கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் அடுத்த 4 ஓவர்களில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் மட்டுமே அடித்து கூட்டணியைக் கட்டமைத்தார்கள். 10 ஓவர்களில் 73 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். நூர் அஹமது வீசிய 13-வது ஓவரில் பராக் இரு சிக்ஸர்கள் அடித்து அதிரடியைத் தொடங்க ராஜஸ்தானின் ரன் ரேட் 8-ஐ தொட தொடங்கியது.

மோஹித் சர்மா பந்தில் சிக்ஸர் அடித்த பராக், இந்தப் பருவத்தின் மூன்றாவது அரை சதத்தை அடித்தார். இவருடன் இணைந்து சஞ்சு சாம்சனும் அதிரடிக்கு மாறினார். 15 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து கடைசிக் கட்ட அதிரடிக்குத் தயாரானார்கள்.

ஆனால், ரஷித் கானும், ஸ்பென்சர் ஜான்சனும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். இந்தச் சூழலில் சிறப்பாகப் பந்துவீசக்கூடிய மோஹித் சர்மா கடைசி நேரத்தில் இரு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தார்.

48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த பராக் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், பராக் இணை 3-வது விக்கெட்டுக்கு 78 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்தது.

உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் 31 பந்துகளில் அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸரும், ஹெட்மையர் ஒரு சிக்ஸரும் அடித்தார்கள். இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசியதால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது ராஜஸ்தான்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களும், ஹெட்மையர் 5 பந்துகளில் 13 ரன்களும் எடுத்தார்கள்.

197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கினாலும், சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில்லிடமிருந்து அதற்கான அதிரடி தொடக்கத்தில் தென்படவில்லை. முதல் 5 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே சேர்த்தார்கள். அவேஷ் கான் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் கில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க ரன் ரேட் சற்று உயர்ந்தது. 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்தார்கள்.

சஹால் வீசிய முதலிரு பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து சாய் சுதர்சன் அதிரடிக்கு மாற முயற்சித்தார். ஆனால், குல்தீப் சென்னின் முதல் ஓவரில் ஸ்கூப் செய்ய முயன்று 35 ரன்களுக்கு எல்பிடபிள்யு ஆனார் சாய் சுதர்சன். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரின் முதல் பந்து வைடாக வீசப்பட்டது. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 5 நிமிடங்கள் தடைபட்டது.

இடைவெளிக்குப் பிறகு குல்தீப் சென் வீசிய முதல் பந்தில் மேத்யூ வேட் போல்டானார். அடுத்து களமிறங்கிய அபினவ் மனோகரும் இதே ஓவரில் போல்டானார். இதனால், கடைசி வரை பேட் செய்தாக வேண்டிய கட்டாயம் கில்லுக்கு ஏற்பட்டது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், பெரிதளவில் பவுண்டரிகள் இல்லாமல் குஜராத்தின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 14-ஐ நெருங்கியது.

விஜய் சங்கர் 3 பவுண்டரிகள் அடித்து சஹால் சுழலில் 16 ரன்களுக்கு போல்டானார். 35 பந்துகளில் அரை சதம் அடித்த கில், அஸ்வின் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

கடைசி 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்பட, சஹால் வீசிய 16-வது ஓவரின் முதலிரு பந்துகளை கில் பவுண்டரிக்கு விரட்டினார். கில் இறங்கி வந்து விளையாடுவதை உணர்ந்து அடுத்த பந்தை வைடாக வீசி கில்லை ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றினார் சஹால். இவர் 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் ஆதிக்கம் செலுத்தினாலும், அஸ்வினின் அடுத்த ஓவரில் ஷாருக் கான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, ராகுல் தெவாடியா கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஓவரை நிறைவு செய்தார். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட்டன. ஆனால், 18-வது ஓவரை வீசிய அவேஷ் கான் ஒரு பவுண்டரியைகூட கொடுக்காமல் ஷாருக் கான் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால், கடைசி இரு ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டன.

முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசியிருந்தாலும், 19-வது ஓவர் நெருக்கடியை குல்தீப் சென்னால் சமாளிக்க முடியவில்லை. தெவாடியா இரு பவுண்டரிகளையும், ரஷித் கான் ஒரு பவுண்டரியும் அடித்தார்கள். இதுதவிர இரு வைட், 1 நோ-பாலை குல்தீப் வீசினார். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்ததால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. போல்டுக்கு இரு ஓவர்கள் மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது.

உரிய நேரத்தில் ஓவர்களை வீசாததால், வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு ஃபீல்டரை நிறுத்த வேண்டிய நிலைக்கு ராஜஸ்தான் ஆளானது.

அவேஷ் கான் வீசிய முதல் பந்தை ரஷித் கான் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரிக்கு அடித்தார். 2-வது பந்தில் இரு ரன், மூன்றாவது பந்தில் மீண்டும் பவுண்டரி என முதல் 3 பந்துகளில் 10 ரன்கள் கிடைத்தன. 4-வது பந்தில் ரஷித் கான் 1 ரன் எடுத்து ஸ்டிரைக்கை தெவாடியாவிடம் ஒப்படைத்தார். 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன.

5-வது பந்தில் தெவாடியா பந்தை மிட் ஆஃப் தலைக்கு மேல் அடிக்க, பவுண்டரி எல்லையில் பட்லர் சிறப்பாக ஃபீல்ட் செய்து பவுண்டரியை தடுத்தார். எனினும், 3 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்ய முயற்சித்தார்கள். பந்துவீச்சாளர் முனையில் தெவாடியா ரன் அவுட் ஆனார். இவர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

கடைசிப் பந்தில் குஜராத் வெற்றிக்கு இரு ரன்கள் தேவைப்பட, ஸ்டிரைக்கில் இருந்த ரஷித் கான் பாயிண்டில் பவுண்டரி அடித்து குஜராத்தை வெற்றி பெறச் செய்தார்.

20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in