ஐபிஎல் 2025-ல் சிஎஸ்கே அணியில் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு, அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை அக்.31 அன்று வெளியிட்டன.
இதில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வின் பங்கேற்பார். எனவே, 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரூ. 55 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை தேர்வு செய்ய ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 2025-ல் தோனி விளையாடுவது உறுதியானலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பந்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் அஸ்வின் இணைந்துள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும் அவரிடம், ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அஸ்வின் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அஸ்வினை ஏலத்தில் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
இதன் தொடர்ச்சியாக, 2 மாதங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனக்கு முதல் ஐபிஎல் வாய்ப்பை வழங்கிய சிஎஸ்கே அணியில் மீண்டும் விளையாடுவதற்கான கனவை வளர்த்துக்கொண்டிருப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.