
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த முழு விவரங்களை காணலாம்.
ஐபிஎல் மெகா ஏலம் எங்கு, எப்போது நடைபெறுகிறது?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25-ல் ஜெட்டாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தவர்களின் விவரம்:
மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தார்கள். ஐபிஎல் நிர்வாகங்களிடம் கருத்துகளைப் பெற்ற நிலையில், மெகா ஏலத்தில் பங்கெடுக்கவுள்ளவர்களின் இறுதிப் பட்டியல் வெளியானது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
சர்வதேச டி20யில் அறிமுகம் ஆகாத 330 வீரர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள். இவர்களில் 318 பேர் இந்திய வீரர்கள்.
2018, 2022-ல் இருந்ததுபோல பிரபல வீரர்கள் பட்டியல் உள்ளதா?
ஆமாம், 2018 ஐபிஎல் ஏலத்துக்குப் பிறகு முதன்முறையாக பிரபல வீரர்கள் பட்டியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரபல வீரர்கள் முதல் பட்டியலில் ஜாஸ் பட்லர், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பிரபல வீரர்கள் இரண்டாவது பட்டியலில் யுஸ்வேந்திர சஹால், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கேஎல் ராகுல், முஹமது ஷமி, முஹமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரியத் தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:
இஷான் கிஷன், அஸ்வின், ஹர்ஷல் படேல், வெங்கடேஷ் ஐயர், நடராஜன், படிக்கல், வாஷிங்டன் சுந்தர், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், கான்வே, டு பிளெஸ்ஸி, டி காக், ஸ்டாய்னிஸ், பேர்ஸ்டோ, சாம் கரண் மற்றும் பலர்.
ஏலம் எவ்வாறு நடைபெறும்?
முதலில் பிரபல வீரர்கள் பட்டியலில் உள்ளவர்களில் இருந்து தொடங்கி கேப்டு வீரர்களில் பேட்டர்கள், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், பந்துவீச்சாளர்கள் என ஒவ்வொருவராக ஏலத்தில் விடப் படுவார்கள். இதன் பிறகு அன்கேப்டு வீரர்கள். ஏலத்தில் தேர்வு செய்யப்படாத வீரர்கள், அடுத்த நாள் ஏலத்தில் பங்கேற்பார்கள்.
ஐபிஎல் அணிகளிடம் மீதமுள்ள தொகை:
மும்பை: ரூ. 45 கோடி
சன்ரைசர்ஸ்: ரூ. 45 கோடி
சிஎஸ்கே: ரூ. 55 கோடி
ஆர்சிபி: ரூ. 83 கோடி
தில்லி: ரூ. 73 கோடி
கேகேஆர்: ரூ. 51 கோடி
ராஜஸ்தான்: ரூ. 41 கோடி
குஜராத்: ரூ. 69 கோடி
லக்னௌ: ரூ. 69 கோடி
பஞ்சாப்: ரூ. 110.50 கோடி
ஒரு அணியால் எவ்வளவு வீரர்களை தேர்வு செய்ய முடியும்:
அதிகபட்சமாக ஒரு அணி 25 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம். ஏற்கெனவே ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களைத் தக்கவைத்துள்ளார்கள் என்பதை பொறுத்து மற்ற வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்யலாம்.
மும்பை: 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
சன்ரைசர்ஸ்: 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
சிஎஸ்கே: 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
ஆர்சிபி: 22 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
தில்லி: 21 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
கேகேஆர்: 19 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
ராஜஸ்தான்: 19 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
குஜராத்: 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
லக்னௌ: 20 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
பஞ்சாப்: 23 வீரர்கள் வரை தேர்வு செய்யலாம்
ஆர்டிஎம் முறை எவ்வாறு வேலை செய்யும்?
தங்களது அணியில் உள்ள வீரரை ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்டிஎம் முறையைப் பயன்படுத்தி ஒரு அணியால் வாங்க முடியும். ஒரு அணி எவ்வளவு வீரர்களைத் தக்கவைத்து கொள்கிறது என்பதை பொறுத்து ஆர்டிஎம் முறை செயல்படும்.
5 வீரர்களையும் தக்கவைத்துக் கொண்ட அணி ஆர்டிஎம் முறையில் ஒரு வீரரை தேர்வு செய்யலாம்.
4 வீரர்களையும் தக்கவைத்துக் கொண்ட அணி ஆர்டிஎம் முறையில் இரு வீரர்களை தேர்வு செய்யலாம்.
இந்த முறை ஆர்டிஎம் முறையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஒரு வீரரை ஆர்டிஎம் முறையில் ஒரு அணி தேர்வு செய்யும் பட்சத்தில், கடைசியாக அந்த வீரருக்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகமான தொகையை கொடுத்து அதே அணியால் அந்த வீரரை தேர்வு செய்யமுடியும்.