ராஜஸ்தான் தலைமைப் பயிற்சியாளராக சங்கக்காரா நியமனம்! | Kumar Sangakkara | Rajasthan Royals |

ஐபிஎல் 2025-ல் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார்.
IPL 2026: Rajasthan Royals confirm Kumar Sangakkara as new head coach, Vikram Rathour elevated to assistant coach
சங்கக்காராவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரையன் லாரா (கோப்புப்படம்)
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் குமார் சங்கக்காரா அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில் 2022-ல் இறுதிச் சுற்றுக்கும் 2024-ல் பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ராகுல் டிராவிட் ஐபிஎல் 2025-க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநராக குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகிக் கொண்டார்.

ராகுல் டிராவிட் விலகியதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2026-க்கு முன்பு புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேட வேண்டிய பொறுப்பு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இருந்தது. ஆனால், அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் பொறுப்பை வகிக்கும் குமார் சங்கக்காரா தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பையும் வகிக்கவுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விக்ரம் ராத்தோர் தலைமை துணைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஷேன் பாண்ட் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தொடரவுள்ளார். ட்ரீவர் பென்னி மற்றும் சித் லஹிரி முறையே துணைப் பயிற்சியாளர் மற்றும் செயல்திறன் பயிற்சியாளர்களாகச் செயல்படவுள்ளார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பு கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவிடம் டிரேட் செய்துள்ளது ராஜஸ்தான். சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சிஎஸ்கேவிடமிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணை கேட்டுப் பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம். ராஜஸ்தான் வசம் தற்போது ரூ. 16.05 கோடி மீதமுள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 9 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், சஞ்சு சாம்சன் இல்லாததால் புதிய கேப்டன் யார் என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயமும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு உள்ளது. தலைமைப் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக கேப்டன் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

IPL 2026: Rajasthan Royals confirm Kumar Sangakkara as new head coach, Vikram Rathour elevated to assistant coach

Rajasthan Royals | IPL 2026 | Kumar Sangakkara | RR Head Coach |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in