ஐபிஎல் ஏலத்தில் 350 வீரர்கள்: 110 பேர் வெளிநாட்டு வீரர்கள்! | IPL Auction |

இந்தப் பட்டியலில் 240 பேர் இந்திய வீரர்கள், 110 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
IPL 2026 auction list announced; 350 players to go under hammer
ஐபிஎல் ஏலத்தில் 350 வீரர்கள்
2 min read

ஐபிஎல் ஏலத்துக்கு மொத்தம் 350 வீரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2026 போட்டிக்கு முன்பு மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்கு முன்னதாக அணி நிர்வாகங்கள், தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15 அன்று சமர்ப்பித்தன.

ஐபிஎல் அணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்கள், இந்த மினி ஏலத்தில் பங்கெடுப்பார்கள். இதுதவிர கடந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத வீரர்கள், புதிய வீரர்கள் எனப் பலர் ஏலத்தில் பங்கெடுப்பார்கள். மினி ஏலத்தில் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்பட வேண்டியிருக்கிறது. இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் 31. ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது.

இந்த ஏலத்துக்கு மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்திருந்தார்கள். இந்தப் பட்டியலை அணி நிர்வாகங்களிடம் ஐபிஎல் சமர்ப்பித்திருந்தது. இந்தப் பட்டியலிலிருந்து ஐபிஎல் அணிகள் தங்களுக்கான விருப்பப் பட்டியலைத் தயார் செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன.

பஞ்சாப் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுக்கப் பதிவு செய்யவில்லை. சிஎஸ்கே முன்னாள் வீரர்கள் மொயீன் அலி, பாஃப் டு பிளெஸ்ஸி ஆகியோர் பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடவுள்ளதால், ஐபிஎல் ஏலத்துக்குப் பதிவு செய்யவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஆண்ட்ரேல ரஸ்ஸல், ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்துக்கு இறுதி செய்யப்பட்ட 350 வீரர்களின் பட்டியலை ஆங்கில செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் 240 பேர் இந்திய வீரர்கள், 110 பேர் வெளிநாட்டு வீரர்கள். குயின்டன் டி காக், துனித் வெல்லாலகே மற்றும் ஜார்ஜ் லிண்டே போன்ற வீரர்கள் 1,355 வீரர்கள் கொண்ட பட்டியலில் பதிவு செய்யாமல் இருந்திருந்தார்கள். இருந்தபோதிலும், இறுதிப் பட்டியலில் இவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அணி நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிதாக 35 வீரர்கள் (1,355 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெறாதவர்கள்) இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னாய், கேம்ரூன் கிரீன் உள்பட 40 வீரர்கள் தங்களுடைய குறைந்தபட்ச தொகையாக ரூ. 2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள். ஆல்-ரவுண்டரான கேம்ரூன் கிரீன் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பகுதியில் டெவான் கான்வே, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், கேம்ரூன் கிரீன், சர்ஃபராஸ் கான், டேவிட் மில்லர், பிரித்வி ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இரண்டாவது பகுதியில் கஸ் அட்கின்சன், வனிந்து ஹசரங்கா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், லியம் லிவிங்ஸ்டன், வியான் முல்டர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ஃபின் ஆலென், ஜானி பேர்ஸ்டோ, கேஎஸ் பரத், குயின்டன் டி காக், பென் டக்கெட், ரஹமனுல்லா குர்பாஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் மூன்றாவது பகுதியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் அதிகபட்சமாக ரூ. 64.30 கோடி கைவசம் உள்ளது. 13 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம். அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸிடம் ரூ. 43.4 கோடி உள்ளது. இந்த அணி 9 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

Summary

IPL 2026 auction list announced; 350 players to go under hammer

IPL 2026 | IPL Mini Auction | IPL Auction |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in