
ஐபிஎல் 2025-ல் முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாடப்போவது யார் என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது.
ஐபிஎல் 2025-ல் லீக் சுற்றில் 7 ஆட்டங்கள் மீதமிருந்த நிலையிலேயே குஜராத் டைடன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு அணிகள் தகுதி பெற்றாலும் முதலிரு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் 1-ல் விளையாடப்போகும் அணிகள் எவை என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
குவாலிஃபையர் 1-ல் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். குவாலிஃபையர் 1-ல் தோல்வியடையும் அணிக்கு இறுதிச் சுற்றுக்குள் நுழைய குவாலிஃபையர் 2-ல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
எலிமினேட்டரில் தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 1-ல் தோல்வியடையும் அணியை குவாலிஃபையர் 2-ல் எதிர்கொள்ளும்.
குவாலிஃபையர் 2-ல் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
குஜராத் டைடன்ஸ் - 18 புள்ளிகள்
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றாலும், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சிஎஸ்கேவுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியடைந்து, முதலிடத்தை உறுதி செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டது குஜராத்.
திங்கள்கிழமை நடைபெறும் பஞ்சாப், மும்பை இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.
புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்ய லக்னௌவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி தோல்வியடைய வேண்டும்.
லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற்றால் குஜராத் 3-வது அல்லது 4-வது இடத்தையே பிடிக்க நேரிடும். இதன்மூலம், குவாலிஃபையர் 1-ல் விளையாடும் வாய்ப்பை இழக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் - 17 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டம் - மும்பைக்கு எதிராக...
மும்பைக்கு எதிராக பஞ்சாப் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதலிரு இடங்களை உறுதி செய்யும். லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெறும் ரன் ரேட்டை பொறுத்து முதலிடமா இரண்டாவது இடமா என்பது தெரிய வரும். எனவே, மும்பைக்கு எதிராக வெற்றி பெற்றால், குவாலிஃபையர் 1-ல் விளையாடுவது உறுதி.
மும்பைக்கு எதிராகத் தோல்வியடைந்தால், முதலிரு இடங்களை பஞ்சாப் அணியால் பிடிக்க முடியாது.
மும்பை இந்தியன்ஸ் - 16 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டம் - பஞ்சாபுக்கு எதிராக...
பஞ்சாபுக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறலாம். ஆனால், லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிகள் அடிப்படையில் ஆர்சிபி முதலிடத்துக்கு முன்னேறும். எனவே, பஞ்சாபுக்கு எதிராக வெற்றி பெற்றால், குவாலிஃபையர் 1-ல் விளையாடுவது உறுதி.
பஞ்சாபுக்கு எதிராகத் தோல்வியடைந்தால், 3-வது அல்லது 4-வது இடத்தையே மும்பையால் பிடிக்க முடியும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17 புள்ளிகள்
மீதமுள்ள ஆட்டம் - லக்னௌவுக்கு எதிராக...
லக்னௌவுக்கு எதிராக வெற்றி பெற்றால் முதலிரு இடங்களை ஆர்சிபி உறுதி செய்யும். பஞ்சாப் - மும்பை ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி முதலிடத்தைப் பிடிக்கலாம். பஞ்சாப் - மும்பை ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால், ஆர்சிபி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும், முதலிடத்தை உறுதி செய்துவிடலாம்.
லக்னௌவுக்கு எதிராகத் தோல்வியடைந்தால், மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் தான் ஆர்சிபி நிறைவு செய்யும். குவாலிஃபையர் 1-ல் விளையாடும் வாய்ப்பை இழக்கும். எனவே கடைசி இடத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.