
ஐபிஎல் 2025 மார்ச் 21 அன்று தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பிசிசிஐயின் சிறப்பு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐயின் புதிய செயலாளராக தேவஜித் சைகியா மற்றும் பிசிசிஐ பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு செய்யப்பட்டார்கள். இருவரும் போட்டியின்றித் தேர்வானார்கள்.
பொதுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் போட்டி மார்ச் 21 அன்று தொடங்கும் என அறிவித்தார். கூட்டத்தில் 12 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் சுக்லா கூறினார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணித் தேர்வு குறித்துப் பேசிய அவர், "ஜனவரி 18, 19-ல் மீண்டும் நடைபெறும் கூட்டத்தில் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணி இறுதி செய்யப்படும்" என்றார்.
சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியைச் சமர்ப்பிக்க ஜனவரி 12 கடைசி நாள். எனினும் இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் மட்டுமே அணிகளை அறிவித்துள்ளன. முஹமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி குறித்து தெரிந்த பிறகு, இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.