தற்காலிக மாற்று வீரர்கள்: ஐபிஎல் 2025 விதிகளில் சிறிய திருத்தம்!

தில்லி கேபிடல்ஸில் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து ஃபிரேசர் மெக்கர்க் விலகல். மாற்று வீரராக முஸ்தபிஸுர் ரஹ்மான் சேர்ப்பு.
ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து விலகுவதாக ஜேமி ஓவர்டன் முடிவு
ஐபிஎல் 2025 போட்டியிலிருந்து விலகுவதாக ஜேமி ஓவர்டன் முடிவுANI
1 min read

ஐபிஎல் 2025-ல் மீதமுள்ள ஆட்டங்களுக்குத் தேர்வு செய்யப்படும் தற்காலிக மாற்று வீரர்களை அடுத்த ஐபிஎல் போட்டிக்குத் தக்கவைக்க முடியாத வகையில் விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 போட்டி ஒரு வாரகாலத்துக்கு நிறுத்தப்படுவதாக மே 9-ல் அறிவிக்கப்பட்டது. சண்டையை நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதையடுத்து, மே 17 முதல் ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானவுடன் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவைவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள். ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து வெளிநாட்டு வீரர்களும் இந்தியா வருவது கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸில் ஜேமி ஓவர்டன், தில்லி கேபிடல்ஸில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களில் பங்கெடுக்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்கள்.

மேலும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சர்வதேச அணிக்காக விளையாட வேண்டிய சூழல் இருப்பதால், இவர்கள் ஐபிஎல் போட்டிக்குத் திரும்புவதும் இன்னும் உறுதியாகவில்லை. எனவே, மாற்று வீரர்களைத் தேர்வு செய்வதற்கான விதிகளில் பிசிசிஐ சிறிய திருத்தம் மேற்கொண்டுள்ளது.

  • ஐபிஎல் 2025-ல் தேர்வு செய்யப்படும் தற்காலிக மாற்று வீரர்கள் மீதமுள்ள ஆட்டங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

  • தற்காலிக மாற்று வீரர்களை அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்குத் தக்கவைக்க முடியாது.

  • தற்காலிக மாற்று வீரர்கள் 2026 ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

  • ஐபிஎல் 2025 போட்டி ஒரு வாரத்துக்கு நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாற்று வீரர்களை, ஐபிஎல் அணிகள் அடுத்தாண்டுக்குத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, ஐபிஎல் போட்டி ஒரு வாரகாலத்துக்கு நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன் 4 வீரர்கள் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டார்கள். செடிகுல்லா அடல் (தில்லி கேபிடல்ஸ்), மயங்க் அகர்வால் (ஆர்சிபி), வான் பிரிடோரியஸ் (ராஜஸ்தான்), நான்ட்ரே பர்கர் (ராஜஸ்தான்). இவர்கள் மற்றும் இவர்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட மாற்று வீரர்களை அடுத்தாண்டுக்குத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

தில்லி கேபிடல்ஸில் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரராக முஸ்தபிஸுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லி கேபிடல்ஸால் இவரை அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிக்குத் தக்கவைக்க முடியாது. முஸ்தபிஸூர் ரஹ்மான் 2026 ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in