அபிஷேக்... அபிஷேக்... அபிஷேக்...: சன்ரைசர்ஸ் சாதனை வெற்றி!!!

ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் எடுத்த அதிகபட்ச ரன்கள்
அபிஷேக்... அபிஷேக்... அபிஷேக்...: சன்ரைசர்ஸ் சாதனை வெற்றி!!!
ANI
2 min read

அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து சாதனை படைக்க, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக அடைந்து சன்ரைசர்ஸ் சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாதில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முஹமது ஷமி வீசிய முதல் ஓவரில் பிரப்சிம்ரன் சிங் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் அடித்தார். பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா அடுத்தடுத்து ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். ஷமி ஓவரில் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார் ஆர்யா. இருவருடைய அதிரடியால் பஞ்சாப் 6 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்தது. ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களுக்கு 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிந்தவுடனே பிரப்சிம்ரன் சிங் 42 ரன்களுக்கு எஷான் மலிங்கா பந்தில் ஆட்டமிழந்தார்.

இரு விக்கெட்டுகளுக்கு பிறகு ஷ்ரேயஸ் ஐயர் சிக்ஸர் மழையைப் பொழியத் தொடங்கினார். 22 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் இன்று கைகொடுக்கவில்லை.

15 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது பஞ்சாப். கடைசி ஓவரில் அதிரடி காட்டுவார் என நம்பப்பட்ட மேக்ஸ்வெல் வழக்கம்போல் ஏமாற்றமளித்து வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்களுக்கு 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

18 மற்றும் 19-வது ஓவரில் வெறும் 13 ரன்கள் கொடுத்த மகிழ்ச்சியில் சன்ரைசர்ஸ் இருந்தது. ஷமி வீசிய கடைசி ஓவரில் கடைசி நான்கு பந்துகளில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஸ்டாய்னிஸ். 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

முஹமது ஷமி 4 ஓவர்களில் 75 ரன்கள் கொடுத்து அதிக ரன்கள் கொடுத்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் தொடக்க பேட்டர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினார்கள். ஹெட் தனது ரிதமை பிடிக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டார். அபிஷேக் சர்மா 2-வது ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து ரன் ரேட்டை பார்த்துக் கொண்டார்.

யஷ் தாக்குர் வீசிய 4-வது ஓவரில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். ஆனால், அது நோ-பால். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். ஃபெர்குசன் இரு பந்துகளை மட்டும் வீசி காயம் காரணமாக வெளியேறியதும் உதவியது.

6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது. சஹல், மேக்ஸ்வெல் என சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தும் பலனில்லை. 19 பந்துகளில் அரை சதம் அடித்தார் அபிஷேக் சர்மா. 10 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ். ஹெட்டும் 31-வது பந்தில் அரை சதத்தைக் கடந்தார்.

முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா அதே ஓவரில் 40-வது பந்தில் சதமடித்தார். இது ஆரஞ்சு படைக்கானது என்று காகிதத்தில் எழுதியதை ரசிகர்களிடத்தில் காண்பித்து மகிழ்விக்கவும் செய்தார் அபிஷேக் சர்மா.

கடைசி 7 ஓவர்களில் 71 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அபிஷேக் சர்மாவே அதிரடியைத் தொடர்ந்தார். ஃபீல்டிங்குக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை வாட்டி வதைத்தார் அபிஷேக். 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். 141 ரன்களில் 14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடக்கம்.

இதன்பிறகு, ஹெயின்ரிக் கிளாஸென் மற்றும் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் வெற்றியை உறுதி செய்தார்கள். அதுவும் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 247 ரன்களை அடைந்து சன்ரைசர்ஸ் சாதனை வெற்றியை அடைந்திருக்கிறது.

சாதனை விவரங்கள்

  • ஐபிஎல் வரலாற்றில் இந்தியர் எடுத்த அதிகபட்ச ரன்கள்

  • ஐபிஎல் வரலாற்றில் இலக்கை அடையும்போது தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்கள்

  • ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக அடையப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இலக்கு

ஷ்ரேயஸ் ஐயருக்குத் தொடரும் சோகம்

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக அடையப்பட்ட அதிகபட்ச இலக்குகள்

  • பஞ்சாப் கிங்ஸ் - 262/2 (எதிரணி கேப்டன் - ஷ்ரேயஸ் ஐயர்) (2024)

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 247/2 (எதிரணி கேப்டன் - ஷ்ரேயஸ் ஐயர்) (2025)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in