முல்லாபூர், அஹமதாபாதில் பிளே ஆஃப் சுற்று!

சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆர்சிபியின் ஆட்டம் மழை காரணமாக லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
முல்லாபூர், அஹமதாபாதில் பிளே ஆஃப் சுற்று!
ANI
1 min read

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் முல்லாபூர் மற்றும் அஹமதாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆட்டம் மழை காரணமாக லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டபோது, லீக் சுற்றுக்கான அட்டவணை மட்டுமே முழுமையாக வெளியிடப்பட்டன. பிளே ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டாலும், ஆட்டங்கள் நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிளே ஆஃப் சுற்று நடைபெறும் இடங்கள் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியானது. முல்லாபூரில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் மே 29 மற்றும் மே 30 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. அஹமதாபாதில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிச் சுற்று முறையே ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2025 போட்டி மீண்டும் தொடங்கிய பிறகு, முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதவிருந்தன. ஆனால், மழையால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. அங்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான ஆட்டம் லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் தனது கடைசி ஆட்டத்தை லக்னௌவுக்கு எதிராக விளையாடியது. சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு ஆர்சிபி லக்னௌவில் லக்னௌவை எதிர்கொள்ளவிருந்தது. இதனால், சன்ரைசர்ஸ் அணியை அங்கேயே இருக்கச் சொல்லி, ஆர்சிபியை லக்னௌவுக்கு அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு அதே மைதானத்தில் லக்னௌவையும் எதிர்கொள்கிறது ஆர்சிபி.

இதுதவிர மழை குறுக்கீடுகள் காரணமாக, மீதமுள்ள ஆட்டங்களை முழுமையாக நடத்தி முடிக்க கூடுதல் 120 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாக, பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களுக்கு மட்டுமே கூடுதல் 120 நிமிடங்கள் வழங்கப்படும். தற்போது அடிக்கடி மழை குறுக்கிடுவதால், ஐபிஎல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. உதாரணத்துக்கு, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் இரவு 9.30 மணிக்கு பிறகே ஓவர்கள் குறைக்கப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in