
ஐபிஎல் 2025-ல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், தில்லி கேபிடல்ஸ் மோதின. இதில் குஜராத் டைடன்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தன. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் நான்காவது அணி எது என்பதில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையே போட்டி நிலவி வந்தது.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நேற்று மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை லக்னௌ இழந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளிகள்):
மீதமுள்ள ஆட்டங்கள் - vs தில்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்
மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் மும்பை வெற்றி பெற்றால், 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
தில்லிக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றால், மும்பை 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். தனது கடைசி ஆட்டத்தில் தில்லி வென்றாலும் 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும் என்பதால், தில்லி போட்டியிலிருந்து வெளியேறும். மும்பை தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், அது மாற்றத்தை உண்டாக்காது.
தில்லிக்கு எதிராக மும்பை தோல்வியடைந்தால், பஞ்சாபுக்கு எதிராகக் கட்டாயம் வெற்றி பெற்று 16 புள்ளிகளை அடைய வேண்டும். தனது கடைசி ஆட்டத்தில் தில்லி தோல்வியடைய வேண்டும். இது நிகழ்ந்தால், தில்லி 15 புள்ளிகளில் இருக்கும். மும்பை 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
மும்பை இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்தால் போட்டியிலிருந்து வெளியேறும்.
தில்லி கேபிடல்ஸ் (13 புள்ளிகள்):
மீதமுள்ள ஆட்டங்கள் - vs மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ்
தில்லி கேபிடல்ஸ் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
மும்பைக்கு எதிராக தில்லி தோல்வியடைந்தால், உடனடியாகப் போட்டியிலிருந்து வெளியேறும். காரணம், தில்லி தனது கடைசி ஆட்டத்தில் வென்று, மும்பை தனது கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் தில்லி 15 புள்ளிகளில் தான் இருக்கும். மும்பை 16 புள்ளிகளில் இருக்கும். இதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். எனவே, குறைந்தபட்சம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி தோல்வியடையாமல் இருக்க வேண்டும்.
மும்பையை வென்று, கடைசி ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோற்றால், மும்பை மற்றும் பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்கு தில்லி காத்திருக்க வேண்டும். இதிலும் மும்பை தோற்க வேண்டும். இது நிகழ்ந்தால், 15 புள்ளிகளுடன் தில்லி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். மும்பை 14 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறும்.