
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முனாஃப் படேல், 70 ஒருநாள் ஆட்டங்கள், 13 டெஸ்டுகள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்று முறையே 86, 35, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடிய இவர் 63 ஆட்டங்களின் 74 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2013-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியிலும், 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் முனாஃப் படேல் இடம்பெற்றிருந்தார்.
2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முனாஃப் படேல், தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.