
குஜராத் டைடன்ஸ் உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கடந்தாண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணிக்காகவும் வேட் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக இரு பருவங்களில் 12 ஆட்டங்களில் விளையாடி 161 ரன்கள் எடுத்துள்ளார். 2022-ல் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஐபிஎல் மெகா ஏலத்தில் மேத்யூ வேட் பங்கெடுக்கவில்லை.
இந்நிலையில், குஜராத் டைடன்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக வேட் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைடன்ஸ் அணியில் ஆஷிஷ் நெஹ்ரா தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். பார்த்திவ் படேல் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். ஆஷிஷ் கபூர் மற்றும் நரேந்தர் நெகி உதவிப் பயிற்சியாளர்களாக உள்ளார்கள்.
ஐபிஎல் போட்டியில் ஒட்டுமொத்தமாக 15 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மேத்யூ வேட். இதில் 13.07 சராசரியில் 183 ரன்கள் எடுத்துள்ளார். 2011 தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் குஜராத் டைடன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
ஐபிஎல் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 25 அன்று பஞ்சாப் கிங்ஸை அஹமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது.