குஜராத்தைப் பந்தாடிய சிஎஸ்கே: கடைசி ஆட்டத்தில் மிகப் பெரிய வெற்றி!

சிஎஸ்கே எதிர்பார்த்த பெரிய வெற்றி ஐபிஎல் 2025-ன் கடைசி ஆட்டத்தில் கிடைத்துள்ளது.
குஜராத்தைப் பந்தாடிய சிஎஸ்கே: கடைசி ஆட்டத்தில் மிகப் பெரிய வெற்றி!
ANI
2 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025-ல் தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று குஜராத் டைடன்ஸை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கேவில் அஸ்வினுக்குப் பதில் தீபக் ஹூடாவும் குஜராத்தில் ககிசோ ரபாடாவுக்குப் பதில் ஜெரால்ட் கூட்ஸியாவும் சேர்க்கப்பட்டார்கள்.

சிஎஸ்கேவுக்கு வழக்கம்போல் ஆயுஷ் மாத்ரே அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அர்ஷத் கான் வீசிய இரண்டாவது ஓவரில் மாத்ரே 3 பவுண்டரிகள், இரு சிக்ஸர்களை நொறுக்கி 28 ரன்கள் எடுத்தார். 17 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஆயுஷ் மாத்ரே, பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மாத்ரே விக்கெட்டுக்கு பிறகு சற்று அமைதிக் காற்று வீசியது. பவர்பிளேயில் சிஎஸ்கே 68 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவுக்கு பிறகு உர்வில் படேல் மற்றும் டெவான் கான்வே சற்று வேகம் காட்டினார்கள். சாய் கிஷோர் பந்தில் சிக்ஸர் அடித்த உர்வில் படேல் அடுத்த பந்திலேயே 19 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிவம் துபே இன்று ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கி சுழற்பந்துவீச்சில் இரு சிக்ஸர்களை அடித்து 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வந்த அனைவரும் அதிரடியாக விளையாடியதால் சிஎஸ்கேவின் ரன் ரேட் 11-க்கு மேல் பயணித்தது. ரஷித் கான் சுழலில் சிக்ஸர் அடித்த கான்வே 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த பந்திலேயே போல்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட் குறையும் சூழல் உருவானது. ஆனால், டியவால்ட் பிரேவிஸ் ரன் ரேட் குறையாதவாறு பார்த்துக் கொண்டார். பிரேவிஸ் அதிரடியால் 18-வது ஓவர் முடிவிலேயே சிஎஸ்கே 200 ரன்களை தொட்டது. முஹமது சிராஜ் வீசிய 19-வது ஓவரில் பிரேவிஸ் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க 19 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி பந்தில் பிரேவிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். பிரேவிஸ் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 20 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது.

230 ரன்கள் எடுக்கப்பட்ட ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

231 ரன்கள் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஷுப்மன் கில் 13 ரன்களுக்கு அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஜாஸ் பட்லர் 5 ரன்களுக்கு கலீல் அஹமதிடம் வீழ்ந்தார். ஷெர்ஃபோன் ரூதர்ஃபோர்ட் டக் அவுட் ஆனார். பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்தது குஜராத்.

தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் அணியை மீட்க முயற்சித்தார்கள். 10 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்தது குஜராத். ஆனால், இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி இரட்டை அடி கொடுத்தார் ஜடேஜா. சாய் சுதர்சன் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு, பேட்டர்கள் யாரும் தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் 121 ரன்களுக்குள் குஜராத்தைச் சுருட்டினால், 9-வது இடத்தை சிஎஸ்கே பிடிக்கலாம் என்ற நிலை உருவானது. காரணம், 110 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது குஜராத். ஆனால், எம்எஸ் தோனி பந்தை தீபக் ஹூடாவிடம் கொடுத்தார். சிஎஸ்கேவுக்கு இந்தக் கணக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்தது. இதே ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார் ஹூடா.

பிறகு, மற்ற பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு குஜராத்தை சுருட்டினார்கள். சிஎஸ்கேவுக்கு பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்தும் கடைசி ஆட்டத்தில் ஒரு சேர கைக்கூடியது.

சிஎஸ்கேவில் அன்ஷுல் கம்போஜ் மற்றும் நூர் அஹமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். புள்ளிகள் பட்டியலில் முதன்முறையாக 10-வது இடத்தில் நிறைவு செய்தாலும் 83 ரன்கள் என்ற மிகப் பெரிய வெற்றியுடன் ஐபிஎல் 2025-ஐ முடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in