ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்

ஐபிஎல் 2008-க்குப் பிறகு சென்னையில் ஆர்சிபி அணியால் சிஎஸ்கேவை வீழ்த்த முடிந்ததில்லை.
ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்
ANI

ஐபிஎல் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது. மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற அந்த ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு கேப்டன் பதவியை உதறியுள்ளார் தோனி. இதையடுத்து ருதுராஜ் கெயிக்வாட், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய கேப்டன் தலைமையில் சிஎஸ்கே அணி எப்படி விளையாடும் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 2022-ல் ஜடேஜா தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி மோசமாகப் பல ஆட்டங்களில் தோற்றது. இதனால் கேப்டன் பதவியைப் போட்டியின் பாதியில் ராஜினாமா செய்தார் ஜடேஜா. தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனார். அதுபோன்ற ஒரு குழப்பம் இம்முறையும் நேரக்கூடாது என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது.

ஐபிஎல் 2008-க்குப் பிறகு சென்னையில் ஆர்சிபி அணியால் சிஎஸ்கேவை வீழ்த்த முடிந்ததில்லை. முதல் வருடத்துக்குப் பிறகு சென்னையில் ஆர்சிபி அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக 2019-ல் 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்குச் சுருண்டது ஆர்சிபி.

ஆர்சிபி அணியில் நட்சத்திரச் சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் கிடையாது. மயங்க் டகர், ஹிமான்ஸு சர்மா, கரன் சர்மா, ஸ்வப்னில் சிங் என்கிற இந்தச் சுழற்பந்துவீச்சுப் படை, சிஎஸ்கே பேட்டர்களுக்கு எந்தளவுக்கு நெருக்கடி தரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சிஎஸ்கே அணியில் தற்போதைக்கு பதிரனா இடம்பெற மாட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனி விளையாடும் தொழில்முறை முதல் ஆட்டம் இது. ஷிபம் டுபேவும் காயத்திலிருந்து மீண்டு வந்து இந்த ஆட்டத்தில் விளையாடவுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த விராட் கோலி, நீண்ட நாள் கழித்து கிரிக்கெட் களத்தில் களமிறங்கவுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பான தொடக்க ஆட்டத்தை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் இன்று வழங்க வாய்ப்புள்ளதா?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in