2025-ல் இத்தனை வீரர்கள் ஓய்வா?

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்டின் கப்தில், கருணாரத்னே, மேத்யூஸ் உள்பட பலர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்கள்.
2025-ல் இத்தனை வீரர்கள் ஓய்வா?
1 min read

இந்த ஆண்டு ஓய்வு ஆண்டா என்று வியக்கும் அளவுக்குப் பல கிரிக்கெட் பிரபலங்கள் ஓய்வு அறிவிப்பை வரிசையாக வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று காலை, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸி. அதிரடி பேட்டர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்த சில மணி நேரங்களில் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்டர் ஹையின்ரிக் கிளாசெனும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவ்விருவரைப் போல இந்த வருடம் பல பிரபலங்கள் ஓய்வை அறிவித்துள்ளார்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் டெஸ்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு இலங்கைப் பிரபலம் ஏஞ்சலோ மேத்யூஸும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்தார் ஆஸி. ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ். சாம்பியன்ஸ் கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தோற்றது. இதையடுத்து பிரபல பேட்டர் ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். எனினும் டெஸ்ட், டி20களில் தொடர்ந்து விளையாடப் போவதாக அவர் அறிவித்தார்.

நியூசிலாந்தின் மார்டின் கப்தில், வங்கதேசத்தின் தமிம் இக்பால் கடந்த ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இலங்கை முன்னாள் கேப்டன் டிமுத் கருணாரத்னே 100-வது டெஸ்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிப்ரவரியில் அறிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை தோல்விக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் அறிவித்தார். டெஸ்ட் மற்றும் டி20யிலிருந்து ஏற்கெனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட மஹ்மதுல்லா, சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2025-ல் இன்னும் என்னென்ன அதிர்ச்சி அறிவிப்புகளை நாம் காணப் போகிறோமோ!

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in