நடப்பு சிபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த டுவைன் பிராவோவின் பயணம் எதிர்பாராத விதமாகக் காயம் காரணமாக முன்கூட்டியே முடிவடைந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டியில் டுவைன் பிரைவோ டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். சிபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பே, நடப்பு சீசனுடன் சிபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார்.
நடப்பு சீசனின் 8-வது ஆட்டத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, செயின்ட் லூசியா கிங்ஸை செப்டம்பர் 24-ல் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிங்ஸ் அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி கொடுத்த கேட்ச் வாய்ப்பைப் பிடிக்க பிராவோ முயன்றார். இந்த முயற்சியின்போது பிராவோவுக்கு எதிர்பாராத விதமாகக் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக களத்திலிருந்து வெளியேறிய அவர், கடைசி வரை பந்துவீச வரவே இல்லை. கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் குவித்தது.
219 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டிரின்பாகோ அணியின் பேட்டிங்கிலும், பிராவோ வழக்கமான இடத்தில் களமிறங்கவில்லை. காயம் காரணமாக, 11-வது பேட்டராகவே அவர் களமிறங்கினார். அணியின் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்றபோதிலும் பிராவோ விளையாடினார். 2 பந்துகளை மட்டுமே அவரால் எதிர்கொள்ள முடிந்தது. காயம் காரணமாக அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். டிரின்பாகோ 138 ரன்கள் மட்டுமே எடுக்க, கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டம் முடிந்தவுடன், பிராவோவின் காயம் குறித்து டிரின்பாகோ அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் கூறுகையில், "பிராவோ காயமடைந்தபோது, பார்க்க மிகத் தீவிரமான காயமாகவே தோன்றியது. அவர் 11-வது பேட்டராக களமிறங்குகிறார் எனில், வெற்றி பெறுவதற்காக மட்டுமே களமிறங்கவில்லை. காயத்தின் தன்மையை அறிவதும் இதன் நோக்கம். இதுதான் அவருடைய முடிவா என்பது உறுதிபடத் தெரியவில்லை. ஆனால், அணியின் கண்ணோட்டத்திலிருந்து கிரிக்கெட்டுக்காகவும், டிரினிடாட் மற்றும் டொபேகாவுக்காகவும், உலகளவிலும் அவர் புரிந்த சாதனைகள் அனைத்துக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோவின் பயணம் காயம் காரணமாக, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் இவர் விளையாடிய கடைசி சிபிஎல் ஆட்டம் இது. 2021 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். 2017 மற்றும் 2018-ல் டிரின்பாகோ அணியை கோப்பை வெல்ல வழிநடத்தினார். 2021-ல் பேட்ரியாட்ஸ் அணியை வழிநடத்திய பிராவோ அந்த அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தார். 2020-ல் ட்ரின்பாகோ அணி கோப்பை வென்றபோது, அந்த அணியில் ஒரு வீரராக இடம்பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார்.
சிபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும்கூட டுவைன் பிராவோ ஐஎல்டி20யில் எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காவும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுக்காகவும் விளையாடவுள்ளார்.