மும்பை அணியைச் சேர்ந்த முஷீர் கான், சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரானி கோப்பையில் பங்கேற்பதற்காக, முஷீர் கான் தனது சொந்த ஊரான ஆசாம்கரில் இருந்து லக்னௌவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது. முஷீர் கானுடன் அவரது குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து லக்னௌ மருத்துவமனையில் சிகிச்சைக்காக முஷீர் கான் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு கழுத்து பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷீர் கான் காயத்தில் இருந்து குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், வரவிருக்கும் இரானி கோப்பை மற்றும் ரஞ்சி கோப்பையின் ஆரம்பச் சுற்றுகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது.
இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் சகோதரரான முஷீர் கான், இதுவரை 9 முதல்தர ஆட்டத்தில் ஒரு இரட்டைச் சதம், 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 51.14 சராசரியுடன் 716 ரன்களை குவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற துலீப் கோப்பையில் இந்தியா ஏ அணிக்கு எதிராக 181 ரன்களை குவித்து அசத்தினார்.