
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக் 2021 ஐபிஎல் போட்டியின்போது தனது அசுர வேகத்தால் கவனம் பெற்றார். 2021 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு விடுவிக்கப்பட்டார்.
மயங்க் யாதவ் எப்படி மணிக்குத் தொடர்ச்சியாக 150 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசி தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்தாரோ அவருக்கு முன்னோடி தான் உம்ரான் மாலிக். இதுவரை 26 ஐபிஎல் ஆட்டங்களில் 9.4 எகானமியில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் உம்ரான் மாலிக். இவருக்கும் காயம் என்பது தொடர் பிரச்னையாக இருந்து வருகிறது.
ஐபிஎல் 2024-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும்தான் அவர் விளையாடினார். இதன்பிறகு, எந்தவொரு கிரிக்கெட்டிலும் உம்ரான் மாலிக் பங்கெடுக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், அவர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
உம்ரான் மாலிக்குக்குப் பதில் சேதன் சகாரியா மாற்று வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். சேதன் சகாரியா கடைசியாக 2024 பிப்ரவரியில் ரஞ்சி சமயத்தில் விளையாடினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸில் ஏற்கெனவே இடக்கை வேகப்பந்துவீச்சாளரான ஸ்பென்செர் ஜான்சன் உள்ளார். தேவைப்படும் எனில் இவருக்கான மாற்றாகவும் சகாரியா கருதப்படுவதற்கு வாய்ப்புண்டு.
சேதன் சகாரியா ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 19 ஐபிஎல் ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் 10.48 எகானமியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சகாரியா 9.27 எகானமியில் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.