
மும்பை வீரர் யஷஸ்வி ஜெயிஸ்வால் ரஞ்சி கோப்பை அரையிறுதியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெயிஸ்வால் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தொடக்க பேட்டராக களமிறங்கி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
விராட் கோலியின் வருகை மற்றும் ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங் காரணமாக, அடுத்த இரு ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.
தொடர்ந்து, சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி அணியில் வருண் சக்ரவர்த்தியைச் சேர்ப்பதற்காக யஷஸ்வி ஜெயிஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும், இந்திய அணியுடன் பயணிக்காத மாற்று வீரராக ஜெயிஸ்வால் அறிவிக்கப்பட்டார்.
சாம்பியன்ஸ் கோப்பையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஞ்சி கோப்பையில் அரையிறுதி ஆட்டத்துக்கான மும்பை அணியில் ஜெயிஸ்வால் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ரஞ்சி கோப்பை அரையிறுதியிலிருந்து ஜெயிஸ்வால் விலகியுள்ளார். மும்பை அணியில் ஏற்கெனவே நிறைய வீரர்கள் இருப்பதால், இவருக்குப் பதில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை.
மும்பை, விதர்பா இடையிலான அரையிறுதி நாக்பூரில் நாளை தொடங்குகிறது.