இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: ஹசரங்காவும் விலகல்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியா, இலங்கை இடையிலான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் சமனில் முடிய, இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், இலங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதில் மாற்று வீரராக ஜெஃப்ரி வாண்டெர்சே சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியில் ஏற்கெனவே தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரனா ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்கள். துஷ்மந்தா சமீரா, நுவான் துஷாரா ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே காயம் காரணமாக விலகினார்கள். தற்போது ஹசரங்காவும் விலகியுள்ளது, இலங்கைக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்தியாவுடனான முதல் ஆட்டத்தில், பேட்டிங்கில் 24 ரன்களும், பந்துவீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தை சமன் செய்ய ஹசரங்கா முக்கியப் பங்காற்றினார்.
இலங்கைக்காக இதுவரை 22 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள வாண்டெர்சே 31.44 சராசரியில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.