உலக சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!
உலக சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!@bcci

சென்னை டெஸ்டில் உலக சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!

ஷெஃபாலி வர்மா இரட்டைச் சதமும் மந்தனா சதமும் அடித்தார்கள்...
Published on

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் ஒரே நாளில் 525 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் டி20 ஆட்டம் போல் நினைத்து அதிரடியாக விளையாடியது மந்தனா - ஷெஃபாலி வெர்மா கூட்டணி. இருவரும் சேர்ந்து 292 ரன்கள் குவித்தனர். சதம் அடித்த மந்தனா ஒரு சிக்ஸர், 27 பவுண்டரிகளுடன் 161 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

90 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் குவித்த முதல் ஜோடி என்ற பெருமையை பெற்றது மந்தனா - ஷெஃபாலி வெர்மா ஜோடி.

இதைத் தொடர்ந்து ஷெஃபாலி வர்மா இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். 8 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 197 பந்துகளில் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷெஃபாலி வர்மா.

மகளிர் டெஸ்டில் வேகமாக இரட்டைச் சதம் அடித்த வீராங்கனை (194 பந்துகள்), மித்தாலி ராஜுக்கு பிறகு இந்திய அணிக்காக இரட்டைச் சதம் அடித்த வீராங்கனை போன்ற சாதனைகளை படைத்தார் ஷெஃபாலி வர்மா.

இதன் பிறகு ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். நாள் முடிவில் ஆட்டமிழக்காமல் ஹர்மன்பிரீத் கௌர் 42 ரன்களும், ரிச்சா கோஷ் 43 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்தது. மகளிர் கிரிக்கெட்டில் ஒரு நாளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக 1935-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இணைந்து ஒரு நாளில் 475 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. எனவே அதனை உடைத்து உலக சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

logo
Kizhakku News
kizhakkunews.in