
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப் பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
2021-ல் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதனளவில் அதிகப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்திய அணிக்கு அதிகப் பதக்கங்கள் கிடைத்து டோக்கியோவில் தான். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அதிகபட்சமாக 6 பதக்கங்களை வென்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்ஸில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 2 பதக்கங்களை மட்டுமே வென்றது. அந்த வேதனையை டோக்கியோ போக்கியது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா 39 தங்கங்களையும் சீனா 38 தங்கங்களையும் வென்று முதலிரண்டு இடங்களைப் பிடித்தன. இந்திய அணிக்கு 48-ம் இடம்தான் கிடைத்தது. கடந்த 40 வருடங்களில் அதுவே பெரிய சாதனை. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கத்துடன் 23-ம் இடம் பிடித்தது.
டோக்கியோவில் இந்தியா பெற்ற பதக்கங்கள்
1. தங்கம் - நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்குத் தடகளத்தில் கிடைத்த முதல் மகுடம் அது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றார். ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. அதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்தது.
2. வெள்ளி - மீராபாய் சானு - பளுதூக்குதல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் 26 வயது இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தாா். மகளிருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட சானு, 202 கிலோ (ஸ்னாட்ச் - 87 + கிளீன் அன்ட் ஜொ்க் - 115) எடையைத் தூக்கி 2-ம் இடம் பிடித்தாா். ஒலிம்பிக் பளுதூக்குதலில் இது இந்தியாவின் அதிகபட்ச சாதனை. முன்னதாக, கடந்த 2000-ஆம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக்ஸில் இந்திய வீராங்கனை கா்னம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் பிறகு, பளுதூக்குதலில் இந்தியாவுக்கான பதக்கத்தை 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாத்தியமாக்கினார் சானு. முதல் முறையாக கடந்த 2016-ல் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் களம் கண்ட சானு, அதில் தோல்வியடைந்து கவலையுடன் வெளியேறினாா். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
3. வெள்ளி - ரவிக்குமார் தாஹியா - மல்யுத்தம்
உலகின் 4-வது சிறந்த வீரராக இருந்ததால் 23 வயது ரவிக்குமார் தாஹியா பதக்கம் வெல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, அப்போதைய உலக சாம்பியனான ரஷியாவின் (ஆர்.ஓ.சி.) ஜாவுர் உகுயேவை எதிர்கொண்டார். ரஷிய வீரர் சிறப்பாக விளையாடி 7-4 என்கிற புள்ளிக்கணக்கில் இந்திய வீரரைத் தோற்கடித்தார். இதையடுத்து ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் சுஷில் குமாருக்கு அடுத்ததாக வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
4. வெண்கலம் - ஆடவர் ஹாக்கி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணி தங்கம் வென்றது. அதன்பிறகு எவ்வளவு முயன்றும் பதக்கம் கைக்கு எட்டவில்லை. 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸுக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெறாமல் போனது. 2016 ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பியது.
5. வெண்கலம் - லவ்லினா - மகளிர் குத்துச்சண்டை
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். அரையிறுதிப் போட்டியில் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார் லவ்லினா. உலகின் நெ.1 வீராங்கனையான சுர்மெனலி சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்தார். தோல்வியடைந்தாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றார் லவ்லினா. ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்தார்.
6. வெண்கலம் - பஜ்ரங் புனியா - மல்யுத்தம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று பதக்கத்தை வென்றார். இந்தியாவின் நட்சத்திர வீரரான 27 வயது பஜ்ரங் புனியா ஆடவா் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் அரையிறுதிச் சுற்றில் அஜா்பைஜானின் ஹாஜி அலியெவை எதிா்கொண்டாா் பஜ்ரங் புனியா. 5-12 என்ற புள்ளிக் கணக்கில் அவர் தோல்வியடைந்தாா். வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவுடன் மோதினார் பஜ்ரங் புனியா. ஏற்கெனவே கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிச் சுற்றில் நியாஸிடம் தோல்வியைத் தழுவினாா். இதனால் என்ன ஆகுமோ என இந்திய ரசிகர்கள் பதற்றமானார்கள். எனினும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆரம்பம் முதல் ஆக்ரோஷமாக விளையாடினார் பஜ்ரங் புனியா. காலில் காயம் இருந்தாலும் முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 8-0 என்கிற புள்ளிக்கணக்கில் போட்டியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
7. வெண்கலம் - பி.வி. சிந்து - பாட்மிண்டன்
ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உலகின் 9-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஒலிம்பிக்ஸில் இரு பதக்கங்கள் வென்ற 2-வது இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை சிந்து பெற்றார். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.