கடைசி வரை போராடிய ஜடேஜா: இறுதியில் இங்கிலாந்துக்கு வெற்றி! | Lord's Test

பேட்டின் நடுவே பந்து பட்டாலும்கூட, கீழே விழுந்தவுடன் மெதுவாகச் சுழன்று சென்று ஸ்டம்பை தொட்டது. மனம் நொறுங்கிய தருணம்!
கடைசி வரை போராடிய ஜடேஜா: இறுதியில் இங்கிலாந்துக்கு வெற்றி! | Lord's Test
படம்: https://x.com/BCCI
3 min read

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜாவின் போராட்டத்தையும் மீறி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.

நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி அரை மணி நேரத்தில் இந்திய அணி எப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததோ, அதேபோல ஐந்தாவது நாள் தொடக்கத்திலும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

முதலில் ரிஷப் பந்தை போல்ட் செய்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். 39 ரன்கள் எடுத்து விளையாடி வந்த கேஎல் ராகுலை பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். நிதிஷ் ரெட்டிக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இவர் ஆர்ச்சர் பந்தில் டக் அவுட் ஆனார். 82 ரன்களுக்குள் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் ரெட்டி உணவு இடைவேளை வரை விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினார்கள். உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் நிதிஷ் ரெட்டி, கிறிஸ் வோக்ஸ் பந்தில் 13 ரன்களுக்கு கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

உணவு இடைவேளையில் இந்திய அணி 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஜடேஜா 53 பந்துகளில் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா மிக அற்புதமான ஓர் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். டெயிலன்டர் பேட்டர்களுடன் எப்படி விளையாட வேண்டும் என்பதற்குப் பாடம் எடுத்தார். பெரும்பாலும் தன் வசமே ஸ்டிரைக்கை வைத்துக்கொண்டு ஓவரின் 4-வது பந்தில் எதிர்முனைக்குச் சென்று கடைசி இரு பந்துகளை மட்டும் ஜஸ்பிரித் பும்ராவை எதிர்கொள்ளச் செய்தார் ஜடேஜா. இதை அவ்வப்போது என்று இல்லாமல் ஓவருக்கு ஓவர் செய்து இங்கிலாந்து அணியைச் சோதித்தார். பும்ராவும் அட்டகாசமாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு முறை மட்டுமே அவர் மடக்கி அடித்து பவுண்டரி எடுத்தார்.

இங்கிலாந்து ஷார்ட் பந்து உத்தியைப் பின்பற்றியபோதுகூட இருவரும் பொறுமையை இழக்கவில்லை. இந்த இணை 130 பந்துகளை நெருங்கியபோது இங்கிலாந்து மீண்டும் ஷார்ட் பந்து உத்தியைக் கையிலெடுத்தது. இம்முறை பொறுமையிழந்த பும்ரா, ஸ்டோக்ஸ் பந்தில் மடக்கி அடிக்கப் பார்த்து கேட்ச் ஆனார்.

ஜடேஜா - பும்ரா இணை 9-வது விக்கெட்டுக்கு 132 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் சேர்த்தது. இந்தக் கூட்டணியில் ஜடேஜா 78 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் எடுத்தார். பும்ரா 54 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் எடுத்தார். பும்ரா ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டன. இதனால், இங்கிலாந்து சற்று பெருநிம்மதி அடைந்தது.

ஆனால், அடுத்து வந்த முஹமது சிராஜும் இன்று மிக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் கால்களுக்கு அருகே இரு ஃபீல்டர்களை நிற்கவைத்து ஷார்ட் பந்துகளை வீசியபோதுகூட சிராஜ் பந்தை அழக்காக தட்டிவிட்டு விக்கெட்டை பாதுகாத்தார். கடைசி விக்கெட் என்பதால் தேநீர் இடைவேளையைத் தாமதப்படுத்த நடுவர்கள் முடிவு செய்தார்கள். இருந்தபோதிலும், ஜடேஜா ஒருபுறம் திடமாக பேட் செய்ய, சிராஜும் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். அவ்வப்போது ஓரிரு ரன்கள் எடுத்து வெற்றிக்குத் தேவையான ரன்னை இந்தியா குறைத்துக்கொண்டு வந்தது. ஜடேஜாவும் தொடர்ச்சியாக 4-வது அரை சதத்தைக் கடந்தார்.

தேநீர் இடைவேளையின்போது இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 56 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

புதிய பந்துக்கு 10 ஓவர்கள் மட்டுமே இருந்ததால், தேநீர் இடைவேளைக்குப் பிறகு காயமடைந்திருந்த சோயிப் பஷீரை பந்துவீச அழைத்தார் பென் ஸ்டோக்ஸ். ஒருபுறம் பஷீர், மறுபுறம் ஆர்ச்சர் என நெருக்கடி கொடுக்க முயற்சித்தார் ஸ்டோக்ஸ். சுழற்பந்துவீச்சில் மட்டும் கடைசி 3 பந்துகளை நம்பிக்கையுடன் சிராஜ் வசம் ஒப்படைத்து வந்தார் ஜடேஜா. தேநீர் இடைவேளைக்குப் பிறகு பஷீரின் மூன்றாவது ஓவரில் சிராஜ் பின்னங்காலில் சென்று பந்தைத் தடுத்தார். பேட்டின் நடுவே பந்து பட்டாலும்கூட, கீழே விழுந்தவுடன் மெதுவாகச் சுழன்று சென்று ஸ்டம்பை தொட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராதவிதமாக சிராஜ் போல்டானார். ஜடேஜா, ரசிகர்கள் என அனைவருடைய மனமும் நொறுங்கியது.

30 பந்துகளை எதிர்கொண்ட சிராஜ் 4 ரன்களுக்கு போல்டானார். ஜடேஜா 181 பந்துகளை எதிர்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 170 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

உழைத்தால் தான் வெற்றி என்பதற்கேற்ப இங்கிலாந்து மிகக் கடுமையாக உழைத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத ஒரு வெற்றியை லார்ட்ஸில் ருசித்தது. டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் - ரிஷப் பந்த் கூட்டணி சிறப்பாகச் சென்றுகொண்டிருந்தபோது, பந்த் அவசியமில்லாமல் ரன் அவுட் ஆனது முதல் திருப்புமுனை. இரண்டாவது இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தொடர்பற்ற ஒரு ஷாட்டை விளையாடி ஜெயிஸ்வால் டக் அவுட் ஆனது அடுத்த திருப்புமுனை. நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி அரை மணி நேரம் அல்லது ஐந்தாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா விக்கெட்டுகளை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இந்தத் தருணங்களில் தவறிழைத்தது, தோல்விக்கு வழிவகுத்தது.

ஆட்டநாயகன் விருதை பென் ஸ்டோக்ஸ் வென்றார். இவர் பேட்டிங்கில் இரு இன்னிங்ஸிலும் முறையே 44 மற்றும் 33 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஷப் பந்தை ரன் அவுட் செய்தார்.

Mohammed Siraj | Ind v Eng | India vs England | India v England | Ind vs Eng | Ben Duckett | Lord's Test | India Tour of England | India England Test Series | Ravindra Jadeja | Jasprit Bumrah | Ben Stokes | Shubman Gill | Rishabh Pant | KL Rahul | Nitish Reddy | Shoaib Bashir

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in