
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 350 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவை என்ற நிலையில் சுவாரஸ்யமான கட்டத்தை முதல் டெஸ்ட் எட்டியுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கேஎல் ராகுல் 47 ரன்களுடனும் ஷுப்மன் கில் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பிரைடன் கார்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே ஷுப்மன் கில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் அரை சதம் அடித்து நிதானமாக விளையாட, ரிஷப் பந்த் இவருடன் இணைந்து கூட்டணியைக் கட்டமைத்தார். நான்காவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 2.61 ரன் ரேட்டில் 63 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ரிஷப் பந்த் தனது ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்தார். அவர் 83-வது பந்தில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 202-வது பந்தில் தனது சதத்தைக் கடந்தார். அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 90-களில் மட்டும் 26 பந்துகளை எதிர்கொண்டார். 130-வது பந்தில் லீட்ஸ் டெஸ்டின் தனது இரண்டாவது சதத்தை எட்டினார் ரிஷப் பந்த். இந்தியாவும் 260 ரன்களை கடந்திருந்ததால், இங்கிலாந்துக்குப் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் இன்னிங்ஸின் வேகத்தை அடுத்த நிலைக்கு அதிகரித்தார் ரிஷப் பந்த். விளைவாக ஷோயப் பஷீர் சுழலில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பந்த் அதிரடியால் உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரையிலான ஆட்டத்தில் இந்தியா 5.37 ரன் ரேட்டில் 145 ரன்கள் எடுத்தது.
ஆனால், இந்திய அணியின் கீழ் வரிசை பேட்டிங் மீண்டும் சொதப்பியது. சதமடித்த ராகுல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கருண் நாயர் 20 ரன்களுக்கு வோக்ஸிடம் ஆட்டமிழந்தார். பேட்டிங் ஆல்-ரவுண்டராக களமிறங்கிய ஷார்துல் தாக்குர் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க சிராஜ், பும்ரா மற்றும் பிரசித் டக் அவுட் ஆனார்கள். ஜடேஜா மட்டும் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்ஸில் 500-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு 471 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் 400-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 6 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 350 ரன்களும் இந்தியாவின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகளும் தேவை.
முன்பு, முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும் இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.