ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதி: லக்‌ஷயா சென் தோல்வி

டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸெல்சனிடம் 20-22, 14-21 என்ற கேம் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதி: லக்‌ஷயா சென் தோல்வி
1 min read

ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதியில் டென்மார்க் வீரர் விக்டர் அக்ஸெல்சனிடம் இந்திய வீரர் லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், டென்மார்க்கைச் சேர்ந்த விக்டர் அக்ஸெல்சனை எதிர்கொண்டார். முதல் கேம் தொடங்கியவுடன் டென்மார்க் வீரர் ஆதிக்கம் செலுத்தினார். 4-1 என முன்னிலையில் இருக்க, லக்‌ஷயா சென் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

சிறப்பாக விளையாடிய லக்‌ஷயா சென் 7-6 என முன்னிலைப் பெற்றார். இருவரும் சரிசமமாக விளையாட 10-9 என்ற நிலையில் ஆட்டம் இருந்தது. இதிலிருந்து, தொடர்ந்து முன்னிலைப் பெற்று வந்த லக்‌ஷயா சென் 17-11 எனப் பெரிதளவில் முன்னிலைப் சென்றார்.

இருந்தபோதிலும், அக்ஸெல்சன் விடாமுயற்சியோடு போராடி 16-18 என்ற நிலையை அடைந்தார். லக்‌ஷயா சென் வேகமாக 20-17 என கேம் பாயிண்டை பெற்றார். கேம் பாயிண்ட் என்றாலும், தொடர்ந்து நம்பிக்கையோடு விளையாடி வந்த அக்ஸெல்சன் 20-20 என சமன் செய்துவிட்டார். இதே வெற்றி நடையைத் தொடர்ந்த அக்ஸெல்சன் 22-20 என லக்‌ஷயா சென்னை வீழ்த்தினார்.

முதல் கேமை இழந்த விரக்தியில் இரண்டாவது கேமில் களமிறங்கினார் லக்‌ஷயா சென். முதல் 7 புள்ளிகளைத் தொடர்ச்சியாகப் பெற்று லக்‌ஷயா சென் அதகளப்படுத்தினார்.

முதல் கேமை போல எந்த நெருக்கடியும் இல்லாமல் படிப்படியாக புள்ளிகளின் இடைவெளியைக் குறைத்துக்கொண்டே வந்தார் அக்ஸெல்சன். இவருடைய ஸ்மாஷை சமாளிக்க முடியாமல் லக்‌ஷயா சென் திணறினார். 7 புள்ளிகள் முன்னிலையில் இருந்த லக்‌ஷயா சென் 8-7 என 1 புள்ளி மட்டுமே முன்னிலைப் பெற்றார்.

மீண்டும் இருவரும் சரிசமமாக விளையாடினார்கள். ஒருகட்டத்துக்கு மேல் அக்ஸெல்சன் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் லக்‌ஷயா சென் தடுமாறினார். மீண்டும் இவருடைய ஸ்மாஷை சமாளிக்க முடியாமல் புள்ளிகளை இழக்கத் தொடங்கினார் லக்‌ஷயா சென்.

15-12, 17-13 என அக்ஸெல்சன் முன்னிலையை நீட்டித்தார். 14-17 என லக்‌ஷயா சென் முன்னேறினாலும், அக்ஸெல்சனின் ஸ்மாஷ் மீண்டும் சிக்கலைத் தந்தது. 18-14 என அக்ஸெல்சன் முன்னேற்றம் கண்டார். இதன்பிறகு, லக்‌ஷயா சென்னால் புள்ளிகளைப் பெற முடியவில்லை. 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது கேமிலும் அக்ஸெல்சன் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 20-22, 14-21 என்ற கேம் கணக்கில் லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார். விக்டர் அக்ஸெல்சன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்‌ஷயா சென் நாளை விளையாடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in