வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம்: மனம் திறந்த ரோஹித் சர்மா

"ஐசிசி போட்டிகளில் 24 ஆட்டங்களில் 23 வெற்றி என்பது இதுவரை கேட்டிராத ஒன்று."
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம்: மனம் திறந்த ரோஹித் சர்மா
ANI
1 min read

ஐசிசி போட்டிகளில் இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்ற பிறகு 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதி வரை சென்றது. 2023 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றில் மட்டும் தோல்வியடைந்தது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. 2025 சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை வென்றது. கடந்த 3 ஐசிசி போட்டிகளில் 24 ஆட்டங்களில் 23 வெற்றியை இந்தியா பெற்று அசைக்க முடியாத அணியாக வலம் வந்துள்ளது.

இந்திய அணியின் இந்த எழுச்சி குறித்து ரோஹித் சர்மா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

"எல்லாம் 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலிருந்து தொடங்கியது. அதில் நாங்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அரையிறுதியில் வெளியேறினோம்.

இதன்பிறகு, வீரர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோம், அவர்கள் எப்படி விளையாட வேண்டும் என்கிற தெளிவைக் கொண்டு வந்தோம். ஒரு தெளிவு கிடைத்தது, வீரர்களிடத்தில் நிறைய உரையாடினோம். சிறப்பாகச் செயல்பட சுதந்திரம் தேவை. அது இருந்தால் மட்டுமே பயம் இல்லாமல் துணிச்சலாக விளையாட முடியும்.

கடந்த மூன்று ஐசிசி போட்டிகளில் இந்திய அணி 24 ஆட்டங்களில் 23 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை. 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மட்டும் தான் இந்தியா தோல்வியடைந்திருக்கிறது. அதிலும் வெற்றி பெற்றிருந்தால், நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும். மூன்று ஐசிசி போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத அணி என்பது அசாத்தியமானது. இதுவரை கேட்டிராத ஒன்று. இருந்தாலும், இதையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். 24 ஆட்டங்களில் 23 வெற்றி என்பது இதுவரை கேட்டிராத ஒன்றுதான்.

24 ஆட்டங்களில் 23 வெற்றி என்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், இந்திய அணி பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. பல கடினமாக காலங்கள் இருந்துள்ளன.

எனவே, இந்த மூன்று ஐசிசி போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் அனைவரும் மிகுந்த மரியாதைக்குத் தகுதியுடையவர்கள்" என்றார் ரோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட காணொளியில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் சரிவு, கிரிக்கெட் வாழ்க்கையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in