
இங்கிலாந்து, இந்தியா இடையிலான லீட்ஸ் டெஸ்ட் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்திய அணி இரு இன்னிங்ஸிலும் முறையே 471 மற்றும் 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 சதங்கள் அடித்தும் தோற்பது முதன்முறை
ஒரு டெஸ்டில் 5 சதங்களை அடித்த எந்தவோர் அணியும் இதற்கு முன்பு தோல்வியடைந்ததில்லை. 5 சதங்களை அடித்தும் தோற்ற முதல் அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது இந்தியா.
77 ஆண்டுகளில் முதன்முறை...
கடைசி நாளில் 350 ரன்களை அடித்து ஓர் அணி வெற்றி பெறுவதும் டெஸ்ட் வரலாற்றில் கடந்த 77 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.
ஒரு டெஸ்டில் அதிக ரன்கள்
1,673 ரன்கள் - இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்டில் ஓர் ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இது.
முன்பு, 1990-ல் மான்செஸ்டர் டெஸ்டில் 1,614 ரன்கள் எடுக்கப்பட்டதே இரு அணிகளுக்கிடையிலான டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள். (ஆட்டம் டிரா)
இங்கிலாந்தின் 2-வதுஅதிகபட்ச சேஸிங்
2022-ல் பிர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 378 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்ததே, இங்கிலாந்தின் அதிகபட்ச சேஸிங்காக உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் லீட்ஸ் டெஸ்ட் உள்ளது. 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 373 ரன்கள் குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
ரிஷப் பந்த் சதமடித்தாலும் பலனில்லை
லீட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் ரிஷப் பந்த் சதமடித்தது இந்தியாவுக்கு வெற்றியைத் தரவில்லை.
இந்தியாவுக்கு வெளியே மொத்தம் 6 சதங்கள் அடித்துள்ளார் ரிஷப் பந்த். இதில் எந்த டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றதில்லை. 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்த டெஸ்ட் டிரா ஆனது. மற்ற 4 டெஸ்டுகளில் இந்தியா தோல்வி.
கம்பீரின் கீழ் 7-வது தோல்வி
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, 11 டெஸ்டுகளில் 3 வெற்றிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. ஒரு டெஸ்ட் டிரா, 7-ல் தோல்வி.
கம்பீரின் கீழ் கடைசி 9 டெஸ்டுகளில் இந்தியா பெறும் 7-வது தோல்வி இது.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அதிகமான இலக்கை வெற்றிகரமாக விரட்டிய அணிகள்
இங்கிலாந்து 378/3 - பிர்மிங்கஹம், 2022
இங்கிலாந்து 375/3 - லீட்ஸ், 2025
ஆஸ்திரேலியா 342/8 - பெர்த், 1977
டெஸ்டில் 1978 முதல் 2021 வரை எந்த அணியும் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் 350+ ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி வெற்றி பெற்றதில்லை. கடந்த 3 வருடங்களில் இருமுறை 370+ ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.