
பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கமளித்துள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான அகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் குல்தீப் யாதவ் சுழலில் தடுமாறி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து ஆசியக் கோப்பையில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டது இதுவே முதன்முறை. பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடத் தயாரானதற்கு இந்தியாவில் சிறியளவிலான எதிர்ப்புக் குரல்கள் இருந்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கிக் கொள்ளவில்லை. விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவிக்கும் விதமாக ஆட்டம் முடிந்த பிறகு இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கிக் கொள்வது மரபு.
ஆனால், வெற்றி இலக்கை அடைந்தவுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே கைக்குலுக்கிக் கொள்ளாமல் ஆடுகளத்திலிருந்து வேகமாக வெளியேறினார்கள். மற்ற இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க ஆடுகளத்துக்குள் வரவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கத் தயாராக இருந்தபோதும், இந்திய வீரர்கள் மறுத்துச் சென்றது சர்ச்சையானது.
அதேசமயம், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பங்கெடுக்கவும் இல்லை. ஷஹீன் அஃப்ரிடி மட்டும் தனக்கான விருதைப் பெற்றுச் சென்றார்.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து விளக்கமளித்தார்.
"வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டு மனப்பான்மைக்கும் மேலானது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். அவர்களுடைய குடும்பத்தினருடன் துணை நின்று உறுதித்தன்மையை வெளிப்படுத்துகிறோம். ஆபரேஷன் சிந்தூரில் பங்கெடுத்த வீரம் மிகுந்த ராணுவ வீரர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறோம்" என்றார் சூர்யகுமார் யாதவ்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களைச் சந்தித்து இதுபற்றி பேசினார்.
"ஆட்டம் முடிந்தவுடன் கைக்குலுக்க நாங்கள் தயாராகவே இருந்தோம். எதிரணியினர் அதைச் செய்யாமல் போனதில் ஏமாற்றமடைந்தோம். கைக்குலுக்குவதற்காக நாங்கள் சென்றோம். அதற்குள் அவர்கள் ஓய்வறைக்கே சென்றுவிட்டார்கள்" என்றார் மைக் ஹெசன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி இதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
"இன்றைய ஆட்டத்தில் விளையாட்டு மனப்பான்மை இல்லாமல் போனதைப் பார்க்க மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. அரசியலை விளையாட்டுக்குள் இழுப்பது விளையாட்டு மனப்பான்மைக்கு எதிரானது. வரும் நாள்களில் எல்லா அணிகளும் பெருந்தன்மையுடன் வெற்றியைக் கொண்டாடும் என நம்புகிறேன்" என எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Asia Cup T20 | Ind v Pak | India v Pakistan | Ind vs Pak | India vs Pakistan | Suryakumar Yadav | Salman Agha | Shaheen Afridi | Mohsin Naqvi | Shivam Dube | Mike Hesson |