பாரிஸுக்குக் கிளம்பிய இந்திய பாரா ஒலிம்பிக்ஸ் குழு

செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரகாஷ் சங்வான், இந்த முறை இந்தியாவுக்கு 25-30 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்
பாரிஸுக்குக் கிளம்பிய இந்திய பாரா ஒலிம்பிக்ஸ் குழு
1 min read

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள இந்திய பாரா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று (ஆகஸ்ட் 25) தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரிஸுக்குப் புறப்பட்டனர்.

வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி, செப்டம்பர் 8 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.  இதில் ஏறத்தாழ 4,400 வீரர்கள், வீராங்கனையில் கலந்துகொள்கின்றனர். பாரா ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸின் தொடக்க விழா அரங்கத்துக்கு வெளியே நடைபெறவுள்ளது.

பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில், இந்தியா சார்பில் 84 வீரர்கள், வீராங்கனைகள் இந்திய பாரா ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் துணைத் தலைவர் சத்ய பிரகாஷ் சங்வான் தலைமையில் கலந்துகொள்கின்றனர். இதில் முதற்கட்டமாக இன்று 20 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பாரிஸுக்குக் கிளம்பினார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரகாஷ் சங்வான், இந்த முறை இந்தியாவுக்கு 25-30 பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய பாரா வீரர்கள், வீராங்கனைகளான பவீனா படேல், சோனல்பென் படேல், மனோஜ் சர்கார், மணீஷா ராம்தாஸ், ஷாக்‌ஷி கசானா, கிருஷ்ணா நகர், சச்சின் கிலாரி ஆகியோர் பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்கின்றனர்.

கடந்த 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது இந்தியக் குழு. டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் மேற்கொள்ளப்பட்ட சாதனையை பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் முறியடிப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in