
காபா டெஸ்ட் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து 394 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி தொடரின் மூன்றாவது டெஸ்ட் காபாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இரண்டாவது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இல்லை. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது.
மழை குறுக்கீடு இருக்கும் என்பதால், மூன்றாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. அலெக்ஸ் கேரி 53 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.
மிட்செல் ஸ்டார்க் 18 ரன்கள் எடுத்து பும்ராவிடம் ஆட்டமிழந்தார். பிறகு மழை குறுக்கிட்டது. ஆட்டம் மீண்டும் தொடங்கியவுடனும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. நேதன் லயனை சிராஜ் போல்ட் செய்ய, கடைசி விக்கெட்டாக கேரி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஜெயிஸ்வால் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஃபுல் லெங்த் பந்தை டிரைவ் செய்ய முயன்று கில் ஆட்டமிழந்தார்.
அனுபவமிக்க விராட் கோலியும் ஸ்டம்புகளுக்கு வெளியே வந்த ஃபுல் லெங்த் பந்தை டிரைவ் செய்ய முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கேஎல் ராகுல் மட்டும் நம்பிக்கையுடன் இருந்தார்.
மழை காரணமாக உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. ரிஷப் பந்த் களமிறங்கியவுடன் மழை குறுக்கீட்டால் இரு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த இடைவெளிகளுக்குப் பிறகு களமிறங்கிய ரிஷப் பந்தும் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மிக மோசமான நிலையில் இருந்தது.
ரோஹித் சர்மா வந்தவுடன் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதன் காரணமாக, முன்கூட்டியே தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. ஸ்டார்க் தனது ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளை வீசி முடித்தார். இதன் பிறகு ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சைக் கையிலெடுத்தது. ஒருபுறம் லயனும் மறுபுறம் ஹெட்டும் பந்துவீசினார்கள். ஆட்டம் தொடங்கி 17 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது.
10 நிமிடத்துக்குப் பிறகு மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்தார்கள். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து இன்னும் 394 ரன்கள் பின்தங்கியுள்ளது.
கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.