13 வருடங்கள் நிறைவு: உலகக் கோப்பையை வென்ற தோனி!

தோனி எடுத்த 91 ரன்கள், அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.
13 வருடங்கள் நிறைவு: உலகக் கோப்பையை வென்ற தோனி!
@ImRaina

இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. உலகக் கோப்பை நினைவுகளை இந்திய வீர்ரகள் பலரும் தங்களின் எக்ஸ் தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஏப்ரல் 2, 2011. இந்த நாளில்தான் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது.

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது. இறுதிச்சுற்றில் கம்பீர், 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்த தோனி தான் அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். கடைசியாக அவர் அடித்த சிக்ஸர், காவியத் தருணமானது.

முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனே ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாகீர் கானும் யுவ்ராஜ் சிங்கும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இலங்கை அளித்த 275 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணி அடைய முயன்றபோது ஆரம்பத்தில் சிறிது தடுமாறியது. சச்சின், சேவாக், கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு யுவ்ராஜ் சிங் தான் வழக்கம் போல களமிறங்குவார் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் இன்னமும் 161 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்கிற நிலையில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் தோனி. கம்பீருடன் அற்புதமாகக் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தோனி எடுத்த 91 ரன்கள், அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி கம்பீருடன் அருமையான கூட்டணி அமைத்து ஆரம்பத்தில் ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்தினார். 49 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் கோலி.

உலகக் கோப்பை வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:

உலகக் கோப்பையை வென்ற பிறகு நன்றியுணர்ச்சியினால் சச்சினை என் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தேன். எல்லோருடைய உணர்வுகளும் சச்சினைச் சுற்றி தான் இருந்தது. ஏனெனில் இதுதான் உலகக் கோப்பையை அவர் வெல்வதற்கான கடைசி வாய்ப்பு. பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் நிகழ்த்திய வெற்றிகளும் ஆட்டங்களும் எங்களுக்கு ஊக்கமாக இருந்தன. அதனால் 2011 உலகக் கோப்பை வெற்றி என்பது சச்சினுக்கு நாங்கள் அளித்த பரிசாகும். இதற்கு முன்பு அவர் தொடர்ந்து நமக்கு வழங்கிக் கொண்டிருந்தார். இந்தத் தருணம் ஒரு பரிபூரண உணர்வைத் தந்தது என்றார்.

2011 உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 9 ஆட்டங்களில் 482 ரன்கள் குவித்தார். 2 சதங்களும் 2 அரை சதங்களும் எடுத்தார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார் (முதல் இடம் 500 ரன்கள் எடுத்த தில்ஷனுக்கு).

2011 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய கெளதம் கம்பீர் 9 ஆட்டங்களில் 393 ரன்கள் எடுத்தார். 4 அரை சதங்கள் எடுத்தார். இறுதிச் சுற்றில் சதமடித்திருந்தால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைத்திருக்கும்.

தொடர் நாயகன் விருது பெற்ற யுவ்ராஜ் சிங் 9 ஆட்டங்களில் 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். ஒரு சதமும் 4 அரை சதங்களும் எடுத்தார். உடல்நலக் குறைவுடன் விளையாடியபோதும், நம்பமுடியாத அளவுக்குத் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

ஜாகீர் கான் 9 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷாகித் அஃப்ரிடியுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்தார்.

2011-ல் உலகக் கோப்பையைக் கையில் ஏந்தினார் தோனி. இன்று வரை அப்படியொரு தருணம் இந்திய அணிக்குக் கிடைக்கவில்லை.

தோனியின் சிக்ஸர் உலகக் கோப்பையை பெற்று தந்தது, என்று தோனியை பலரும் பாராட்டியபோது தனது எதிர்ப்பைத் தெரிவித்தார் கெளதம் கம்பீர். இப்போதுகூட, “ஒரு சிக்ஸரால் மட்டும் உலகக் கோப்பையை பெறவில்லை” என்றும், உலகக்கோப்பை வெற்றியில் தோனியை மட்டும் எல்லோரும் கொண்டாடுவது தவறு என்றும் கம்பீர் பேட்டியளித்திருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், 2011 உலகக் கோப்பைப் போட்டி முழுக்கவே கெளதம் கம்பீர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

2011-ல் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து இன்று வரை, மீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய அணி என்கிற ஏக்கம் ரசிகர்களுக்கு உள்ளது.

2015 மற்றும் 2019 உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 2023-ல் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in