
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் சீருடை தொடர்புடைய ஐசிசியின் விதிகள் அனைத்தும் பின்பற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பிப்ரவரி 19 முதல் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன.
நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும் பட்சத்தில் அந்த ஆட்டங்களும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே இந்த சிக்கல் தீர்ந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கேப்டன்களின் சந்திப்பில் ரோஹித் சர்மா பங்குபெற மாட்டார் என்று தகவல் வந்தது.
மேலும் ஐசிசி நடத்தும் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் சீருடையில் பொறிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசியின் விதி. சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுவதால், சீருடையில் பாகிஸ்தான் என்ற சொல்லைப் பொறிக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இதுதொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்.
"சாம்பியன்ஸ் கோப்பையில் சீருடை தொடர்பாக ஐசிசியின் விதிகள் அனைத்தையும் பிசிசிஐ பின்பற்றும். இலச்சினை மற்றும் சீருடை தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்கின்றனவோ அதை முழு உணர்வுடன் பிசிசிஐயும் பின்பற்றும்" என்றார் தேவஜித் சைகியா.